இறந்த பின்னும் வாழுதற்கு மனிதருக்கு
இறைத் தூதர் அருளி நின்ற கடமை மூன்று
சிறந்திருக்கும் நல்லறங்கள் போற்றிச் செய்த்ல்
சிறுவருக்கு நல்ல கல்வி தந்து நிற்றல்
மறைந்த பின்னர் தனக்காகத் தொழுதிறைஞ்சும்
மகன் தன்னைப் பெற்றெடுத்தல் இவைகள் மூன்றே
இறந்த பின்னும் நற் கூலி கிடைக்கச் செய்யும்
என்றுரைத்தார் நபி பெருமான் போற்றி வாழ்வோம்
Monday, June 9, 2008
இறைத் தூதர் அருளி நின்றார்
பழம் பாடல் புதுக்கவிதை
தேர்ச் சக்கரம் தன்னை நிமிர்த்த வல்ல
திமிர்ந்திருக்கும் தோள் கொண்ட பாண்டியனின்
பேர்ச் சிறப்பை சொல்லுகின்றார் புலவர் அந்தப்
பெருமையினைப் பார்த்தாலே பெருமை தோன்றும்
ஊர் முழுக்க தன் அழகுக் குடையின் கீழே
ஒன்றாக்கி ஆளுகின்ற பாண்டியனின்
போர்த் திறத்தை அறிந்துணர்ந்த காரணத்தால்
பொன்னணிகள் அணிந்துள்ள வானோர் இந்தப்
பூமியிலே கால் வைக்க அஞ்சினராம்
புகழுகின்றார் பாண்டியனைப் புலவர் நன்கு
ஆமிதனை நாம் அறிவோம் இமையவர் கால்
அந்தரத்தில் தான் இருக்கும் தரையைத் தொடா
தாமிதனை தெரிந்திட்ட புலவர் அதைத்
தன் தலைவன் பாண்டியனின் புகழாய்ச் சேர்த்தார்
நாமிதனைக் கண்ணுற்றோம் மகிழ்ச்சி கொண்டோம்
நந் தமிழர் அனைவருக்கும் தர விழைந்தோம்
முத்தொள்ளாயிரம்
நேமி நிமிர் தோள் நில்வு தார்த் தென்னவன்
காமர் நெடுங்குடைக் காவலன் ஆணையால்
ஏம மணிப் பூண் இமையார் திருந்தடி
பூமி மிதியாப் பொருள்
Sunday, June 8, 2008
ஞான வீரர்
உடம்பு எனும் சட்டைக்குள் உயிர் கிடந்து
ஒராயிரம் துன்பம் அடைகின்றது
விடுதலைக்காய் ஏங்குகின்ற உயிரை நானும்
விட்டு விட விழைகின்றேன் அதனால் இனி
உணவருந்தல் நிறுத்திடுவேன் தண்ணீர் கூட
உட் செல்ல அனுமதியேன் என்று சொல்லி
நிணம் தசை நார் கொண்டதம்மின் உடலை விட்டு
நிம்மதியாய் உயிர் பிரியச் செய்த வீரர்
கணப் பொழுதும் ஏழைகளை மறந்து விடாக்
காந்தியத் தொண்டர் இவர் அடிகள் தம்மின்
உளத்தினிலே குருவாக உயர்ந்து நின்ற
உயர் குணத்துத் துறவி இவர் வள்ளுவரின்
குறட் கருத்துக்குயிராகித் துறந்த வீரர்
கொள்கை வழி சிறந்து நின்ற காந்தி சீடர்
அற வழியார் வினோபா அவரே இங்கு
ஆண்மையுடன் உயிர் துறந்த ஞான வீரர்
திருக்குறள்
மற்றும் தொடர்ப்பாடு எவன் கொல் உயிர் அறுக்கல்
உற்றார்க்கு உடம்பும் மிகை
அன்றே சொன்னார்
மதங்கள் என்று சொல்லி நிற்பார் தமக்கு ஒரு
மாபெரிய கேள்வியினை வைத்தார் நல்ல
விதம் எதையும் உணர்ந்துணர்ந்து உண்மை சொல்லும்
விவேகானந்தத் துறவிகேட்பீர் அய்யா
விதவைகளின் கண்ணீரைத் துடைக்க வொண்ணா
வெறும் வயிற்று ஏழைக்ளுக்கு உணவளிக்கா
மதங்களினை மதங்கள் என்று கொள்ள மாட்டேன
மனிதர்களே உணர்ந்திடுங்கள் என்று சொன்னார்
மனிதர்களுக்குதவத்தான் மதங்கள் வெறும்
மடமைகளும் சடங்குகளும் அல்ல என்று
கனி மொழியில் சொல்லாமல் கொஞ்சம் கொஞ்சம்
கடின மொழி தனிலேதான் சொல்லிச் சென்றார்
தனி மனிதரல்ல பெரும் இயக்கமாகி
தாம் நின்றார் நமக்கெல்லாம் தாயாய் நின்றார்
இனி உணர்வோம் மனிதர்களே மனிதம் பேணல்
எம்மதமும் கொண்டுள்ள சுருதி நாதம்
இன்றும் தேசத் தந்தை
அறிவித்த போராட்டம் வன்முறையாய்
ஆகிவிட்ட சேதியினை காந்தி கேட்டார்
தெரிந்திட்டார் காவலர்கள் பத்துப் பேரைத்
தீக்கிரையாய் ஆக்கி விட்டார் தொண்டரென்று
பதை பதைத்தார் அரசாங்கம் தனை அழைத்தார்
படு கொலைக்குத தாமேதான் பொறுப்பு என்றார்
கதையல்ல இந்நாட்டில் நடந்ததுதான்
காந்தி இன்றும் நம் தேசத் தந்தையன்றோ
ந்பி பெருமான் வணிகம்
ஒட்டகங்கள் விற்கின்றார் நபி பெருமான
உவகையுடன் உள்ளத்தில் பெருமையுடன்
கட்டி வைத்த ஒட்டகத்தில் ஒன்றே யொன்று
கால் ஊனம் நபி பெருமான் இல்லா வேளை
அட்டி நின்ற பணியாளும் ஒட்டகங்கள்
அனைத்தையுமே ஒரே விலைக்கு விற்று விட்டார்
எட்டி பணி நிமித்தம் சென்ற நபி பெருமான்
இச்சேதி அறிந்தவுடன் துடித்து விட்டார்
விரைந்து வந்த நபி பெருமான் ஒட்டகங்கள
விரும்பி வாங்கிச் சென்றவரைத் தேடிச் சென்றார்
மறந்து எந்தம் உதவியாளர் உங்களிடம்
மறைத்து விட்டார் ஒரு சேதி பொறுக்க வேண்டும்
சிறந்த நல்ல ஒட்டகங்கட்(கு)கிடையில் ஒரு
சேதமுற்ற ஒட்டகத்தைத் தந்து விட்டார்
மறந்திடுவீர் என்று சொல்லி பணத்தைத் தந்து
ம்றுபடி அவ்வொட்டகத்தை ஒட்டிச் சென்றார்
பழம் பாடல் புதுக்கவிதை
சேரனது பெருங்கோட்டைக் கதவைச் சென்று
சேர்ந்துவிட்டேன் அவன் காணும் ஆசையாலே
ஆரமென மாணிக்க மாலை அதை
அணிந்திருப்பான் தனைக் காணும் வேட்கையாலே
பேர்கிறது என் நெஞ்சு முன்னே சென்று
பொருமி மீண்டும் வருகிறது அலைகிறது
ஊரினிலே வறியவர்தம் நாணம் அவர்
உள்ளமதை வருத்தி நிற்கும் தன்மை போலே
வறுமையிலே வாடி நிற்பார் செல்வந்தர் தம்
வாசலுக்கு உதவி கேட்கப் போயிடுவார்
அறுபடும் தம் உள்ளத்து நாணம் தன்னால்
அங்கொன்றும் கேட்காமல் வெட்கி நிற்பார்
தறி படும் அப்பாட்டைத்தான் எந்தன் உள்ள்ம்
தன் பாடாய்க் கொண்டிங்கேத் தவிக்கிறது
அறிவீரோ வ்றியவரும் நானும் ஒன்றாய்
ஆன கதை இவ்வாறே பெண்ணாள் சொன்னாள
முத்தொள்ளாயிரம்
ஆய்மணிப் பைம்பூண் அலங்குதார்க் கோதையைக்
காணிய சென்று கதவடைந்தேன் - நாணிப்
பெருஞ் செல்வர் இல்லத்து ந்ல்கூர்ந்தார்ப் போல
வருஞ் செல்லும் பேரும் என் நெஞ்சு