உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பு அது
உணர்த்துவது மனிதனாக வாழு என்று
கச்சை கட்டி நிற்பதல்ல அரசியலும்
கண்ணியமாய் மக்களையே காப்பதற்கே
புத்தி கெட்டு வெறி கொண்டு உயிர் பறித்தல்
புல்லர்களின் செயல் என்று உணர்த்துவது
சத்தியமாய் நீதி இந்த நாட்டில் இன்றும்
சரியாக இருக்கிறது சில நேரத்தில்
Tuesday, August 31, 2010
உச்ச நீதி மன்றத் தீர்ப்பு
Sunday, August 29, 2010
திறன் என்றே போற்றிடுவார்
ஊராரின் பிள்ளைகளை உணர்ச்சி யூட்டி
ஒரு நொடியில் தீக் குளித்து மாள வைப்பார்
சீராட்டி தம் மக்கள் நாட்டை யாள
செய்வ தெல்லாம் சரியாகச் செய்து வைப்பார்
தேரோட்டி மகன் கொன்ற மனுவைப் பற்றி
தினம் பேசி மேடைகளில் அழுதிடுவார்
பாராட்டித் தம் மகனின் தவறையெல்லாம்
பழந்தமிழர் திறன் என்றே போற்றிடுவார்
கேவலத்தில் உழல்வதைப் பார்
அவரவர்க்கு சிலை அவரே வைத்துக் கொள்ளும்
அளவிற்குக் தமிழ்நாட்டைக் கெடுத்து உள்ளார்
தவறதனை ஒழுக்கமாக்கி வாழ்ந் திருக்கும்
தலைவரவர் தன் குடும்பம் வாழ்வதற்காய்
கவலையின்றி இலவசங்கள் வழங்குகின்றார்
கையூட்டாய் மானமுள்ள தமிழருக்கு
உலகு போற்றும் முதற் பண்பைக் கொண்ட இனம்
உளம் இழந்துக் கேவலத்தில் உழல்வதைப் பார்
Saturday, August 28, 2010
என் தம்பி நாஞ்சில் நாடன்
அண்ணாச்சி என அழைக்கும் போதினிலே
அன்பு முகம் என் முன்னர் வந்து நிற்கும்
புண்ணாக்கிப் பார்ப்போர்கள் மத்தியிலே என்னைப்
புதிதாக்கிப் பார்க்கின்ற இனிய தம்பி
கண்ணோட்டம் என்னைப் போல் கொண்ட செல்வம்
கண்ணியத்தின் மொத்த உரு நாஞ்சில் நாடன்
முன்னோர்கள் செய்த தவம் தம்பி கொண்டேன்
முத்தமிழாள் அருளாலே தெம்பு கொண்டேன்
Friday, August 27, 2010
ஆண்டவரே என்ன சொல்வீர்
நாணமே யில்லாதார் பொறுப்புக் களில்
நாயகராய் அமர்ந்திருக்க அந்தோ அந்தோ
ஊனமுற்ற நாடாகத் தமிழர் நாடு
ஒலமிட வழியின்றி ஒடுங்கி நிற்க
கானம் ஒரு குடும்பம் மட்டும் பாடி நிற்க
கணக்கில்லா நல்லவர் வாய் மூடி நிற்க
ஆனதென்ன எம் நிலைமை இவ்வாறாக
ஆண்டவரே உம் நிலை தான் என்ன சொல்வீர்
Thursday, August 26, 2010
கோயிலும் தான் உனக்கில்லையே
தங்களுக்குத் தாங்களே சம்பளத்தைத்
தாறுமாறாய்க் கூட்டிக் கொள்ளும் தங்கங்களை
எங் களுக்கு நாடாளு மன்றத்திற்காய்
ஏன் தந்தாய் எம் இறைவா கோபம் என்ன
பங்கமிது என்றுணராப் பாவியர்கள்
பாவப்பட்ட மக்களையே நினைத்தாரில்லை
எங்களது மக்களவை எமக்கு இல்லை
என் செய்வாய் கோயிலும் தான் உனக்கில்லையே
Wednesday, August 25, 2010
விருதேயில்லை
ஆபாச அரசியலார் எல்லாம் இங்கே
அடுக்கடுக்காய் டாக்டர் பட்டம் வாங்கி விட்டார்
மேலான விளையாட்டாம் சதுரங்கத்தில்
மேனாட்டார் அனைவரையும் வென்று நின்ற
சீராளர் விஸ்வநாதன் கேட்கவில்லை
செப்பியது அரசாங்கம் பட்டம் என்று
ஊரெங்கும் தேசியக்கொடி யோடாடும்
உண்மையாளர் ஊர் குறித்துக் கேள்வி கேட்டு
வேரதனிலே வெந்நீரை ஊற்றி விட்டார்
நாராசமாக்கி விட்டார் நமது நாட்டின்
நலமறியா அரசாங்க அதிகாரிகள்
தாராளமாக இங்கு டாக்டர் பட்டம்
தருகின்றார் அனைவருக்கும் விலை தான் கூட
போராடி வெல்கின்ற விஸ்வநாதன்
போன்றோர் இவ் விருதையெல்லாம் வேண்டாம் என்றல்
பாராட்டுக்கு ரியதுதான் வாங்கினால்தான்
பரிதாபம் இதுவெல்லாம் விருதேயில்லை