Monday, March 16, 2009

வாழ்வார்கள் சில பேர்

சாவதற்காய்ப் பிறந்து சாவதற்காய் வளர்ந்து
சாவதற்காய் வாழ்வார் பல பேர்
ஆவதற்காய் பிறந்து ஆவதற்காய் வளர்ந்து
ஆவதற்காய் வாழ்வார் சில பேர்
நோவதற்காய் பிறந்து நோவதற்காய் வளர்ந்து
நோவதற்காய் வாழ்வார்பல பேர்
நுண்ணிய அறிவாலே மனிதரை வாழ வைக்க
நோன்பென வாழ்வார்கள் சில பேர்

Saturday, March 14, 2009

என்ன செய்வேன்

அன்பு செய்யப் பழகாமல் மனிதரெல்லாம்
அழுதழுது வாடுகின்ற கேடு கண்டேன்
பண்பு கொண்டு வாழாமல் பணத்திற்காக
பரிதவித்து அலைகின்ற சோகம் கண்டேன்
நண்பரென்று நல்லவரைக் கொள்ளாராகி
நாடெங்கும் புலம்பி நிற்கும் அவலம் கண்டேன்
என் செய்வேன் என்னிறையே இவரைக் கண்டு
இரக்கங்கள் கொள்வதன்றி என்ன செய்வேன்

Friday, March 13, 2009

வரமாய் வர

எல்லாப் புகழும் இறைவனுக்கே என்று
ஏற்றங்கள் சொல்லி நின்றார்
இனிய நம் தமிழிலே சொல்லியே தமிழர்கள்
எல்லோர்க்கும் மகிழ்ச்சி தந்தார்
அல்லா ரக்கா ரகுமான் ஆஸ்கரே வென்றாலும்
அடக்கத்தின் உருவம் கண்டீர்
அதனால்தான் தந்தையின் ஆசியால் வந்தது
ஆஸ்கரும் என்று சொன்னார்


ஆண்டவன் மொழி தந்தை அனைவருக்கும் நன்றி
ஆக்கிய ரகுமான் அவர்
அன்னையின் ஆசியை அன்பதன் ஆசியாய்
அனுபவித்து உணர்ந்து வென்றார்
வேண்டுவோம் ரகுமானின் வெற்றிகள் மென்மேலும்
விரிந்திட வேண்டி நிற்போம்
வெள்ளை மனத்தவர் ரகுமானின் வெற்றிகள்
விண்ணவர் வரமாய் வர

Tuesday, March 10, 2009

தமிழோடு வாழுகின்றேன்

எப்போதும் நல்லதே நினைப்பவர் செய்பவர்
என்றென்றும் வாழுகின்றார்
ஏய்ப்பதே தொழிலாகக் கொண்டிங்கு மகிழ்பவர்
இருக்கையில் மாளுகின்றார்
தப்பேதும் இல்லாத வாழ்க்கையை அருளினாய்
தலைவனே வணங்கி நின்றேன்
தனியனாய் மாண்டாலும் தமிழர்கள் எனக்காக
தான் அழும் வாழ்க்கை தந்தாய்


எப்போது அழைப்பாய் நீ என்பது தெரியாமல்
ஏழை நான் வாழுகின்றேன்
இருந்தாலும் அழைப்பினை எதிர்பார்த்து எதிர்பார்த்து
இன்றும் நான் ஏங்குகின்றேன்
தப்பாகிப் போன இவ்வுறவுகள் மத்தியில்
தனியாகித் தூங்குகின்றேன்
தலைவா நீ அருள்கின்ற தூக்கத்திற்காகவே
தமிழோடு வாழுகின்றேன்

போதிப்போம்

சாதிகள் சொல்லி இளையவருக்குள்
சண்டைகள் மூட்டுகின்றார்
சரித்திரம் சொல்லி பகையினை மேலும்
சதி வழி ஏற்றுகின்றார்
ஆதியில் நடந்த தவறுகள் மறந்து
அடுத்தவோர் தலைமுறையை
அனைவரும் ஒன்றென உணர்த்தியே வாழ்ந்திட
அன்பதை போதிப்போம்

உணருகின்றேன்

கற்றவர் அனைவரும் பெற்றவனாய் என்னைக்
கண்ணியப் படுத்துகின்றார்
உற்றவரோ எந்தன் உயர்வினைக் கண்டு
உள்ளுக்குள் புலம்புகின்றார்
மற்றவரோ தம் மனத்துக்குள் வியந்து
மலிந்த சொல் வீசுகின்றார்
உற்றவனே எந்தன் ஆண்டவனே இவை
உன் செயல் உணருகின்றேன்

Saturday, March 7, 2009

ஏற்றங்கள் கொண்டு வாழ்வான்

அப்பனும் பிள்ளையும் உறவுகள் அனைத்துமே
ஆண்டவன் அருளுவது
அவனுக்கு மனம் இல்லை என்பதை உணர்கையில்
அழுதங்கு வாடி நிற்பார்
தப்பாகப் பிள்ளைகள் நல்லோர்க்கு வாய்த்திடும்
தலைவனின் வேலையது
தலை சாய்த்து அழுவார்கள் வருந்தியே துடிப்பார்கள்
தனைத் தானே நொந்து கொள்வார்


தான் பெற்றோம் தான் பெற்றோம் என்றங்கு ஆடுவார்
தலையிலே அடி கொடுக்க
தன்னிலை அறியாத தந்தையை மதியாத
தனயனைத் தேடி அருள்வான்
ஏன் பெற்றோம் என்றவர் ஏங்கியே துடித்திட
எப்போதும் அழுகை தருவான்
ஏகம்பன் கயிலாயன் அவன் மட்டும் மகன்களால்
ஏற்றங்கள் கொண்டு வாழ்வான்