Saturday, March 7, 2009

ஏற்றங்கள் கொண்டு வாழ்வான்

அப்பனும் பிள்ளையும் உறவுகள் அனைத்துமே
ஆண்டவன் அருளுவது
அவனுக்கு மனம் இல்லை என்பதை உணர்கையில்
அழுதங்கு வாடி நிற்பார்
தப்பாகப் பிள்ளைகள் நல்லோர்க்கு வாய்த்திடும்
தலைவனின் வேலையது
தலை சாய்த்து அழுவார்கள் வருந்தியே துடிப்பார்கள்
தனைத் தானே நொந்து கொள்வார்


தான் பெற்றோம் தான் பெற்றோம் என்றங்கு ஆடுவார்
தலையிலே அடி கொடுக்க
தன்னிலை அறியாத தந்தையை மதியாத
தனயனைத் தேடி அருள்வான்
ஏன் பெற்றோம் என்றவர் ஏங்கியே துடித்திட
எப்போதும் அழுகை தருவான்
ஏகம்பன் கயிலாயன் அவன் மட்டும் மகன்களால்
ஏற்றங்கள் கொண்டு வாழ்வான்

0 மறுமொழிகள்: