Tuesday, June 16, 2009

பழம் பாடல் புதுக் கவிதை கம்பன் வாலியின் வினாக்கள்

வாலியின் முன் நிற்கின்ற இராமனிடம்
வகை தொகையாய்க் கேள்விகளை வைத்தான் வாலி
மாலவனா இச் செயல்கள் செய்தான் என்று
மனத்துக்குள் மறுகி நொந்து கேட்டான் வாலி
தூயவனே அஞ்சு வகைக் கொடுமைகளில்
துடிக்கின்ற முதற் கொடுமை கொலைதான் அதை
மாயவனே நீ செய்து முன்னே வந்தாய்
மயக்கமது துணைவியினை இழந்ததாலோ

காய்கின்றாய் இராவணனை அவனோ அந்தக்
கடைக்கோடிக் கொடுமையதாம் காமம் கொண்டான்
ஆய்வு செய்தால் உன் குற்றம் முதற் குற்றமாம்
அறிந்தாயா மன்னவனே மானை விட்டு
சேயிழையை கவர்ந்து சென்றான் சிறை எடுத்தான்
சிறப்பாக தம்பியினை முன்னே விட்டு
நீ யெந்தன் உயிரினையே கவருகின்றாய்
நினைத்தாயா? இரண்டுமிங்கு ஒன்றுதானே


நாளை இந்த உலகத்தில் வீரரென்போர்
நடத்துவது நியாயம் என்று உலகோர் சொல்ல
வாளழகா நீ இந்த வழியைத் தந்தாய்
வழியின்றி நிற்குது இங்கே நேர்மை எல்லாம்
ஆழமாக வைக்கின்றான் வினாக்களையே
அதையேதான் இன்று இந்த உலகமெங்கும்
வாழையடி வாழையென பெரியார் செய்தால்
வான் பெருமாள் செய்தது போல் என்றார் கண்டோம்

கம்பன்

அறை கழல் அலங்கல் வீரர் ஆயவர் புரிவதாண்மைத்
துறையெனல் ஆயிற்றன்றே தொன்மையில் நன்னூற்கெல்லாம்
இறைவ நீ என்னைச் செய்தது ஈதெனில் இலங்கை வேந்தன்
முறையல செய்தான் என்று முனிதியோ முனிவிலாதாய்


கொலை,களவு,பொய்.சூது.காமம் 5 குற்றங்கள் இராவணன் செய்தது
இறுதிக் குற்றம்.இராமன் செய்ததோ முதற் குற்றம்

0 மறுமொழிகள்: