Sunday, May 9, 2010

அன்னையர் தின அவலங்கள்

அன்னையர்க்கு தினம் என்று ஒன்று வேண்டாம்
அன்றாடம் அன்பு செய்யும் மனம் தான் வேண்டும்
முன்னம் உமைச் சுமந்திருந்த முந்நூறு நாள்
முலை தந்து உமை வளர்த்த பிந்நூறு நாள்
கன்னமதில் கன்னம் வைத்துக் கொஞ்சிக் கொஞ்சிக்
கண்மணியே தண்ணிலவே என்றாடும் நாள்
விண்ணவர் போல் உமை வளர்க்க ஆசை கொண்டு
வேண்டு மட்டும் உணவளித்துப் பசித்து நின்ற

அன்னையரை அகதியென முதியோர் இல்ல
அடைப்புக்குள் தள்ளுகின்ற அவலமதை
நன்குணர்ந்து மாற்றுங்கள் இல்லையெனில்
நாய் பேயும் மதியாது உங்கள் தன்னை
தன்னலம் தான் பெரிதென்று எண்ணும் வரை
தாயேது உதவி நின்ற தந்தையேது
பின்னுமக்கும் இதுவே தான் இல்லமென்று
பிள்ளைகளும் கொண்டு சேர்க்க அன்றழுவீர்

0 மறுமொழிகள்: