Wednesday, May 28, 2008

திருமந்திரம்

                 அம்பலத்தில்  நல்லவர்  போல்  ஆடுகின்றார்
                         அறைகளுக்குள்  லீலைகளில்  கூடுகின்றார்
                 தம் பலத்தில்  அத்தனையும்  நடப்பதுவாய்
                          தம்பட்டம்  அடிக்கின்றார் மேலும் மேலும்
                 வெம்பி  இங்கு  ஏழையர்கள்  துன்பமுறும்
                           வேலைகளைச்  செய்வதிலே  வெட்கமுறார்
                  அம்புவியில்  தங்களது  செய்கை யெல்லாம
                            ஆரறிவார்  ரகசியம்  என்றெண்ணுகின்றார்



                  நல்லவரோ  இவற்றையெல்லாம்  கண்டு  கண்டு
                             நாள்  தோறும்  சிரிக்கின்றார் அவர்   உணர்வார்
                  எல்லை யற்ற  பரம்  பொருளாம்  இறைவன்  அவன்
                             எங்கே  தான்  இல்லை   என்றும்    பார்த்திருப்பான்
                  கள்ளமற்றோர்  உணர்ந்திருந்தார்  தவறு  இல்லை
                             களங்கமுள்ளோர்  மறந்திருந்தார் தவறுகின்றார்
                  அள்ளி  அருள்  தருகின்ற   இறைவன்  அவன்
                              அனைத்தையுமே  அறிந்திருப்பான் என்றுணர்க



                                                     திருமந்திரம்


                    கண்காணி  இல்லை யென்று  கள்ளம்  பல   செய்வார்
                    கண்காணி  இல்லா  இடமில்லை  காணுங்கால்
                    கண்காணி  ஆகக்  கலந்தெங்கும்  நின்றானை  
                    கண்காணி  கண்டார்  களவொழிந்தாரே
                            

பழம் பாடல் புதுக்கவிதை மூத்தொள்ளாயிரம்

                           நீர்  நிலையில்  மலர்ந்துள்ள  மலர்களையே
                                      நெஞ்சினிலே  மாலை  யாக்கிச் சூட்டியுள்ளான்
                           ஈரம்  மட்டும்  அவன்  நெஞ்சில்  இல்லை  இங்கே
                                       இளஞ்சோழன்  காவல்  ஒன்றும்  சரியாயில்லை
                           யாரவனைப்  பாராட்டி  நின்ற போதும்
                                        என் மனது  ஏற்காது  அவர்தம்  காவல்
                           சீரதனைச் சொல்கின்றேன்  கேட்பீர்  நாட்டீர்
                                         சிந்தித்தால்  உணர்வீர்கள்   உண்மை  நன்றாய்


                           காவலன்  தான்  மறுத்தேனோ  இல்லை  இல்லை
                                         கண்கள்  வழி  நுழைந்தானே தடுத்தேனோ நான்
                           ஆவலுடன்  அவன்  தன்னையன்றி  வேறு
                                         யார்  நினைவும்  இல்லாமல்  வாழும்  என்னை
                            காவல்  செய்ய  வேண்டுமென்றால்  மாலை  தோறும்
                                         கையிலுள்ள  குழல் கொண்டு  ஊதி என்றன்
                            ஆவியினைப்  பறிக்கின்ற  ஆடு  மேய்க்கும்
                                          அச்  சிறுவர் கொடுஞ் செயலைத்  தடுக்க  வேண்டும்


                            பாவி  மகள்  கேள்வியிலே  நின்று  ஆடும்
                                          பதை பதைப்புக்  கேள்வியினைப்  புரிந்தீரோ  நீர்
                            தாவி  அவன்  மார்பினிலே  சாய  வொண்ணொ
                                          தனி  இரவு  கொடும்  இரவு  வருவதனை
                            கோவலர்  வாய்க்  குழல்  உணர்த்தும்  என்பதாலே
                                          கொடுமை  அதைத்  தடுப்பதற்கு  வேண்டுகின்றாள்
                             பாவம்  இந்தக்      கோதையினைக்    காப்பதற்கு
                                           பனி மலரின்  சோழன் அவன்  வருவானோ  தான்



                                                      முத்தொள்ளாயிரம்


                          தெண்ணீர்  நறு  மலர்த்தார்  சென்னி  இளவளவன்
                          மண்ணகம்  காவலனே  என்பரால்  -  மண்ணகம்
                          காவலனே  ஆனக்கால் காவானோ  மாலை வாய்க்
                          கோவலர்  வாய்  வைத்த  குழல்

Tuesday, May 27, 2008

எவர் கேட்டார்

               கோயில்  ஒன்று  கட்டுதற்கு  ஆசை  கொண்டார்
                           கோடி கோடியாய்க்  குவித்த நண்பரொருவர்
                ஆயிரம்  பல்லாயிரமாய்  ஏழை  மக்கள்
                            அரவணைக்க  ஆளின்றி   அலைகின்றார்கள்
                தாயினைப்  போல்  அவர்களையே  ஆதரித்து
                         தழுவி  நல்ல  உதவிகளை  நீங்கள்  செய்தால்
                போய்  அந்த  உதவியெல்லாம்  ஆண்டவனின
                         பொற் பாதம்  தனைச் சேரும்  அதனை விட்டு


                 கோயில்  ஒன்றும்  வேண்டாமே  என்று  சொன்னேன்
                           கோபமுற்று  தீ விழியால்  என்னைச்  சுட்டார்
                  பாயிரங்கள்  பனுவல்  என்று  எதுவும்  வேண்டா
                            படைத்தவனின்  படைப்பான மனிதர்  கோயில்
                  ஆங்கவர்க்கு  செய்கின்ற  உதவி யொன்றே
                            ஆண்டவனைச் சென்றடையும்  கோயில்  அல்ல
                  ஈங்கிதனைத்  திருமூலர்  சொல்லிச்  சென்றார்
                             எவர்  கேட்டார்  கோயில்  கட்டி  அலைகின்றாரே


                                                                திரும்ந்திரம்

                              படமாடும்  கோயில்  பரமர்க்கொன்று  ஈயில்
                              நடமாடும்  கோயில்  நம்பர்க்  கங்கா
                              நடமாடும்  கோயில்  நம்பர்க் கொன்று  ஈயில்
                              படமாடும்  கோயில்  பரமர்க் கங்காகும்
               

உதவுங்கள்

                      பெற்ற  தாய்க்குச்  சோறு  போட  விருப்பமின்றி
                                     பேணுதற்கு மனமின்றி வாழும்  மாந்தர்
                       உற்றவர்க்கோ  ஊரார்க்கோ  உதவியேதும்
                                      ஒரு போதும் செய்யாத  பண்பின்  வேந்தர்
                       கற்றவர்க்கோ  கலைகளுக்கோ  ஈயா அன்பர்
                                       கையெடுத்து  எவரையுமே  வணங்கா மெய்யர்
                       மற்றவரை  எண்ணாமல்  தன்னை  மட்டும்
                                  மனத்தினிலே  கொண்டு  வாழும  மனிதர்  என்பார்


                      கற்றவர் போல்  சபைகளிலே  காட்டிக்  கொள்ள
                                        கையூட்டுப்  பெற்றவர்கள்  வசதி செய்வார
                      மற்றவர்   முன்  அவர்  போடும்  வேடம்  கண்டால்
                                         மனிதரென  வாழ்பவர்கள்  அவதி  கொள்வார்
                      பற்றற்ற  மனிதரைப்  போல்  கோயிலுக்குள்  அவர்
                                          பக்தி   வேடம்  போடையிலே    இறைவன்  செல்வார்
                      கற்றவரோ  ஒரு போதும்    போலியான   இந்தக்
                                          கயவர்களை  மனிதரென்று  கொள்ள  மாட்டார


                     
                     உற்றவர்க்கு  உதவுங்கள்  உறவை  யெல்லாம
                                         உயர்  நட்பாய்க்  கொள்ளுங்கள்  நட்பையெல்லாம்
                     மற்றவர் போல்  எண்ணாமல்  உறவாய்   மாற்றி
                                         மனிதரென   வாழுங்கள்  இறைவன்  உங்கள்
                     முற்றத்தில்  என்றென்றும்  காத்திருப்பான் அந்த
                                         மூலப்  பொருள்  உங்களையே  பார்த்திருப்பான்
                      கற்றல்  என்றால்  இது  ஒன்றே   கற்றல்  ஆகும்
                                          கனிந்திடுவீர்  அன்பு கொண்டே  பணிந்திடுவீர்

பழம் பாடல் புதுக்கவிதை முத்தொள்ளாயிரரம்

                   கை வளைகள்  கண்டாயா  என்றன்  தோழி   அவன்
                                   கடல்  விளைந்த   சங்கினம்தான் உணர்ந்தாயா  நீ
                    மெய்யினிலே  மெய்யான  மார்பகத்தில்   நான்
                                    மெய்ம் மறக்க  அணிந்த  அந்த  மாலையதும்
                     பொய்யில்லை  அவன் கடலில்  பிறந்த  முத்து
                                     பொதிகை  மலைச்  சந்தனமே  மேனியெல்லாம
                     அய்யன்  அந்தப்  பாண்டியனின்  உறவே  என்றன்
                                      அழகுக்கு  அழகு  செய்யும் உறவாய்க் கொண்டேன்




                      கொய்த மலர் மாலையினை    அணியக் கூடக்
                                      கொடுப்பினையே  இல்லாமல்  இந்தத்  தோள்கள்
                       அய்யன்  அவன்  தோள்களுக்காய்  மீண்டும்  மீண்டும்
                                       அலை பாய்ந்து  நிற்கிறதோ  புரியவில்லை
                       பொய்யில்லை  அவன்  உடைமை  எல்லாம் இங்கே
                                        பொருந்தி  எந்தன்  மேனியெல்லாம்  அழகு செய்ய
                        அய்ய  இந்த  தோள்கள்  மட்டும்  எதற்குதான்  இங்கே
                                         அடி போட்டு  நிற்கிறதோ  புரியவில்லை


                                                          முத்தொள்ளாயிரம்

                              கையதவன் கடலுள்   சங்கமால் பூண்டதுவும்
                              செய்ய  சங்கீன்ற செழுமுத்தால்  -  மெய்யதுவும
                              பண்பொரு  வேல்  மாறன்  வார்பொதியில்  சந்தனமால்
                              என் பெறா  வாடும்  என்  தோள்

                                         

                                         
                                       

Monday, May 26, 2008

வாழ்த்துகின்றேன்

              அமெரிக்க  நாட்டினிலே  கல்வி கற்க  
                       அனைவருமே  சென்றுள்ளார்  என்ற போதும்
               தமிழுக்காய் சில  நேரம்  ஒதுக்கி  அங்கே
                       தமிழ்ப் பணியும்    செய்வதனை  அறிந்த போது
               இமைப் பொழுதும்  தமிழ்  குறித்த  எண்ணம்  இல்லா
                        என் இனிய  தமிழ்  நாட்டை  எண்ணி  நொந்தேன்
               வகைப்  படுத்தி  தமிழ்  வளர்க்கும்  இளைஞர்களே
                         வாழ்த்துகின்றேன்  என்றென்றும்  வாழியவே
                        

                        

தனியாக வெல்லட்டும்

          அமெரிக்கப்  பல்கலையில்  கணினி  கற்கும்
                    அன்புடைய  ஹரிணி  என்னும்  மாணவியர்
           தமிழுக்கு அன்பு செய்து  மன்றம்   கொண்ட
                    தங்களது நண்பர்களின் பெருமை  சொன்னார்
           அமெரிக்க  மண்ணிலேயும்்   தமிழாம்  தாயை
                     அன்போடு  போற்றுகின்ற  அவரையெல்லாம்
           தமிழாலே  வாழ்த்துகின்றேன் உலகை  அன்பால்
                      தனியாக  வெல்லட்டும்  இவர்கள்  எல்லாம்

திருக்குறள்

                 வள்ளுவரை  அடிக்கடி  நான்  சந்திக்கின்றேன்
                           வாய்ப்பதனை  நானே தான்  பெற்றும்  உள்ளேன்
                  உள்ளு தொறும்  உள்ளுதொறும்  உயர்வளிக்கும்
                            உண்மை வழி  அவர்தானே  காட்டி  நின்றார்
                  கள்ள மனம்  ஒழித்  தவர்தம்  முன்னால்  நின்றால்
                            கனி வழியாம்  தனி  வழியைக்  காட்டுவாரே
                  தெள்ளு  தமிழ்ப்  புலவோர்கள்  அனைவருக்கும்
                            தெளிந்த  வழி  காட்டியவர்  அவரே  தானே


                  உலகத்தில்  முதன்மை இடம்  யாருக்கென்று
                            உழன்ற  படி  வள்ளுவரின்  முன்னே நின்றேன்
                  சில  கற்றுப்  பல  கல்லாச் சிறுவன்  என்னைச்
                            சிரித்த படி  வரவேற்றார்  கேள்வி வைத்தேன்
                  பல  கற்று  உலகத்தை  வென்று  நின்ற
                            பண்டிதர்கள்  பலர்   உண்டு படையெடுத்து
                  உலகத்தை  தன்  குடைக் கீழ்  கொண்டு வந்த
                           ஒன்றிரண்டு  மன்னர்  உண்டு  மேலும் நல்ல


                  சிலை  வடிக்கும்  சிற்பி  உண்டு சிந்தனையால்
                           செம்மாந்து  நிற்கின்ற  கவிஞர்  உண்டு
                  விலையில்லாக்  கலைகள்  உண்டு  நாட்டையாளும்
                           வித்தகர்கள்  பல  பேர்கள்  உண்டு  உண்டு
                  நிலையில்லா  வாழ்விதனை  விட்டு  நீங்க
                           நினைக்கின்ற  துறவியரோ  நிறைய  உண்டு
                  கல  கலவென்றே  சிரித்து  அனைவரையும்
                           கையெடுத்து  ஆளுகின்ற  பெண்டிர்  உண்டு



                   இவர்களிலே  யார்  உயர்ந்தோர்  என்று  ஒரு
                            இடக்கு  மடக்கான  கேள்வி  கேட்டு  வைத்தேன்
                   அவர்  உடனே  வயற் காட்டைக்  காட்டி  நின்றார்
                            அங்கொருவர்  உழுது  நின்றார்  என்ன  என்றேன்
                   தவ  வேட  ஞானியரும்   கூட   இங்கே
                             தடம்  மாறிப்  போவார்கள்  உழவன்  மட்டும்
                   அவன்  கையை  மடக்கித்  தலைக்  கீழே  வைத்து
                             அப்படியே  படுத்து  விட்டால் ஒழிந்ததெல்லாம



                   துறந்து  விட்டோம்  என்பாரோ  துயில்  இழப்பார்
                              தொல் புகழின்  புலவோர்கள்  புகழ்  இழப்பார்
                    இறந்து  பட்டோர்  புகழினிலே  வாழ்வோரெல்லாம்
                               இரந்து  நிற்போர்  கூட்டத்தில்  இணைந்து நிற்பார்
                    பரந்து  பட்டுப்  பாராள்வோர்  பல்லிளிப்பார்
                               பாவியராய்  அனைவருமே  மாறி நிற்பார்
                    உழந்து  நிற்கும்  உழவன்  அவன்  இல்லையென்றால்
                                உலகம்  இல்லை  உயிர்கள் இல்லை  ஒன்றும் இல்லை


                                         குறள்

               உழவினார்  கைம்மடங்கின்  இல்லை  விழைவதூஉம்
               விட்டேம்  என்பார்க்கும்  நிலை
                   
                             

பழம் பாடல் புதுக்கவிதை முத்தொள்ளாயிரம்

                    நாணம்  வேண்டும்  வெட்கம்  வேண்டும்  நடக்கையிலே
                                 நன்னடையை மென்னடையைப்  பயிலல்  வேண்டும்
                    காண  வரும்  அனைவருமே  ஆகா  என்று
                                 கண்மணி யுன்  நடையழகைப்  புகழல்  வேண்டும
                    பேணி  இந்த  வழியனைத்தும்   கொண்டால் தானே
                                 பெண்ணென்று கொள்வார்கள்  இல்லை யென்றால்
                     சாணி  கரைத்தூற்றினாற்  போல்  உன்னை  யிங்கு
                                  சாடை  மாடை  பேசுவார்கள்  புரிகி்றதா


                     பையப் பைய  நடந்து  வந்தால்  தானே
                                   பார்ப்பவர்கள்  உன்னழகைப்  போற்றுவார்கள்
                     கையெடுத்து  உயர்த்தி  ஒரு  வாழ்த்துச்  சொல்லி
                                   காலெடுத்து  மெல்ல  நீயும்  நடந்தால் தானே
                      ஐயன்  எங்கள்  பாண்டியனின்  அழகை யெல்லாம்
                                    ஆராதனை  செய்து   மனதில்  கொள்வோம
                      மெய்யழகே  மெல்ல  நட  பெண்மை  போற்று
                                     மேதினியில்  யானைகளில்  பெண்  நீயேதான்



                     பெண்  யானை பாண்டியனைச் சுமந்து  வரப்
                                    பேசுகின்றாள்  பெண்ணவளும்    அவனைக்  காண
                      கண்  மலர்ந்து  கதவருகே  காத்திருக்க
                                     கட  கடவென்றே  அதுவும்  நடந்து  போனால்
                      என் செய்வாள்  பெண்ணவளும்  அதனாலே  தான்
                                     எப்படி  ஒரு  பெண்  நடக்க  வேண்டுமென்று
                      தன்னுணர்வை யெல்லாம்  அந்த  யானையிடம்
                                     தளிர்க் கொடியாள்  போதித்து  நிற்றல்  கண்டோம்
                                     


                                                            முத்தொள்ளாயிரம்

                         எலா அ  மடப் பிடியே  எங்கூடல்க்  கோமான்
                         புலா அல்  நெடு நல்  வேல்  மாறன்    -  உலாங்கால்
                         பைய  நடக்கவும்  தேற்றாயால்  நின் பெண்மை
                         ஐயப்  படுவது உடைத்து

Sunday, May 25, 2008

என் அண்ணன்

            எழுதி விட்ட  கவிதைகளை  உடனுக்குடன்
                        என் அண்ணன்  முகிலனிடம்  சொல்லிடுவேன்
            களி கொண்டு  அவர்  ஆடும்  ஆட்டம்  தன்னை
                        கை பேசி  வழியாகக் கண்டு கொள்வேன
            தொழுது  நிற்பேன்  இவ்வன்பை  எனக்களித்த
                        தோன்றாத துணையான  இறைவன்  தன்னை
             பழுதில்லா  இவர்  அன்பே  என்னை  மேலும்
                         பல  ஆண்டு  உயிரோடே  வாழச் செய்யும்


            குடந்தை  பெற்ற  பெருஞ் செல்வம்  எங்கள்  அண்ணன்
                         குளிர்  தமிழின்  வளர்  தமிழின் கொற்றம்  காண்பீர்
            மடந்தை  தமிழ் பெற்றெடுத்த ம  பொ  சி  யாம்
                         மாபெரிய  தமிழ்  அறிஞர்க் குற்ற   பிள்ளை
            இடந் தெரிந்து  அன்னை  தமிழ்  இவரிடத்தில்
                         எனைக்  கொண்டு  சேர்த்தாளே  என்ன  சொல்வேன்
            கடன்  பெற்றேன்  இவர் பிள்ளை  தன்னிடத்தும்
                          கைம்மாறு  என்ன செய்வேன்  புரிந்தேன் இல்லை

என் மகன்

        உலகெங்கும்  வாழுகின்ற  தமிழருக்கு   என்
                 உளங்  கொண்டு  வாழ வைக்கும்  தமிழாள்  தன்னை
        தினம்  கொண்டு  தருவதற்கு  வழிகள்  செய்த என்
                 திருமகனை  அறிமுகம்  தான்  செய்ய வேண்டும்
        முனம்  செய்த  நல் வினையே  இவனை  எந்தன்
                 முத்தமிழாள் மகனாகத் தந்து நின்றாள்
        மனம்  வாழ்த்தி  நிற்கிறது  சுந்தர ராமன்  என்னும்
                  மகன்  இவனை நீங்களும்தான்  வாழ்த்துங்களேன்


        புதுக்கோட்டை  நகருக்கு   சுழற்கழகப்
                 பொன் விழா  உரை  நிகழ்த்தச் சென்றிருந்தேன்
        எனைப்  பார்த்துக் கொள்ள   என்று  வந்த  இவன்
                  இன்று வரை  எனைப்  பார்த்துக் கொள்கின்றானே
         தினம்  உங்கள்   அனைவருக்கும்  கவிதை  தர
                  தேடி இந்த  வலைப் பூவை  உருவாக்கினான்
         குணம்  கொண்ட  என்  மகனை  நல்லவனைக்
                  கூடி நீங்கள் அனைவருமே  வாழ்த்த வேண்டும்
        

கம்பரும் கண்ணதாசனும் - பாகம் 2

அன்பர்களுக்கு வணக்கம் !

கம்பரும் கண்ணதாசனும்  சொற்பொழிவின் இரண்டாம் பாகம்.


Get this widget | Track details | eSnips Social DNA

திருக்குறள்

              வானத்தில்  அமுதம்  அது  இருக்குதென்று
                        வழிவழியாய்  முன்னோர்கள்  சொல்லித் தந்தார்
              போனால்த்தான்  கிடைக்கும்  என்றும் அவரே  சொன்னார்
                        பொய்யென்று  சிலர்  அதனை  எதிர்த்தும் நின்றார்
               ஆனால்  நம்  வள்ளுவரோ  தெளிவு தந்தார்
                         அறிவு  தந்தார  நந்தமையே  உணர வைத்தார
               வான்  தானாய்  தீங்கின்றி  வழங்குகின்ற
                          வளர் மழை தான்  உயிர்க்கெல்லாம்  அமுதமென்றார்


                                                      குறள்  


                   வான் நின்று  உலகம்  வ்ழங்கி  வருதலால்
                   தான்  அமிழ்தம்  என்றுணரற் பாற்று
                         

பழம் பாடல் புதுக்கவிதை முத்தொள்ளாயிரம்

               பார்க்க  வேண்டும்  என்று  நானா  பார்த்து  நின்றேன்
                        பாவி மகன்  வீதி  வழி வந்து விட்டான்
               ஆர்க்கின்ற  யானை  என்ன  வாங்கா  என்ன
                        ஆட வைக்கும்  மேளமென்ன  தாளமென்ன
               வார்த்தெடுத்த  வடிவழகு  மேனி என்ன
                         வாள்  என்ன  தோள்  என்ன  தாள் தான்  என்ன
                பேர்த்தெடுத்து  என்  மனதைக்  கொண்டு  போன
                          பேராண்மைப் பேரழகு  என்ன  என்ன


                போர்க்குணத்தான்  அவனிடத்தில்  செல்க  தோழி
                           போய்  என்ன  சொல்வதென்று  நானே  சொல்வேன்
                 கார்  குழலாள்  என்  தோழி  என்று  என்றன்
                            கனிப் பெயரைத்  தனிப் பெயரைச்  சொல்ல வேண்டாம்
                 பார்த்தென்னைப் பெற்றெடுத்து  இன்று வரை
                             பக்குவமாய்க்  காத்து நிற்கும்  தாயின் பேரை
                 சீர்  நிறைந்த  நம்  ஊரின்  பெயரையெல்லாம்
                             செப்புகின்ற  வேலையெல்லாம்  வேண்டாம்  தோழி


                 ஊரெல்லாம்  உறங்குகையில்  உறங்கவொண்ணா
                              உயிரொன்று  படும்  பாட்டைச் சொன்னால் போதும்
                 தார் மார்பைச்  சேர்ந்திருக்கும்  அந்த  மாலை
                               தான்  செய்த  பேறில்லாள்  கண்கள்  மட்டும்
                 நீர்  சோர அவன்  நினைவில்   நெஞ்சம்  சோர
                                நிலைகுலைந்து  நிற்பதனை  மட்டும்  சொல்லு
                 வார் குழலாள்  அரற்றுகின்றாள்  பாண்டியனின்
                                வரவிற்காய்  தோழி  என்ன  செய்வாள்  பாவம

                                                     முத்தொள்ளாயிரம்

                        என்னை  உரையல் என் பேருரையல்  ஊருரையல்
                        அன்னையும்  இன்னாள் என்ன  உரையல்-பின்னையும
                        தண்படா யானை  தமிழ்நர் பெருமாற்கு என்
                        கண் படாவாறே  உரை
  

Saturday, May 24, 2008

கைம்மாறு என்ன செய்வேன்

ஆயிரம் பேர் பார்க்கின்றார் தினம் தினமும்
அன்னை தமிழ் மீது கொண்ட அன்பினாலே
போயிதனைத் தெரிந்து கொண்ட நண்பர் சிலர்
புகழுதற்கு தொடங்கி நின்றார் தடுத்து நின்றேன்
தாயவளாம் தமிழ் என்னைத் தத்தெடுக்க
தடம் உணர்ந்தார் அன்பு மழை பொழிகின்றார் காண்
போய் இவற்கு கைம்மாறு என்ன செய்வேன்
பொழிந்து நிற்பேன் தமிழ் மழையை மீண்டும் மீண்டும்

வள்ளுவரும் குறளும்

வள்ளுவரைத் தவமிருந்தே பெற்றாள் நல்ல
வடிவழகில் சிறந்தோங்கும் தமிழாம் தாயாள்
அள்ளி அவர் தருகின்ற செல்வம் எல்லாம்
அப்படியே கைக் கொண்டால் வெற்றி கொள்வீர்
எள்ளி நகையாடுதற்கு இடமேயின்றி
எங்கேயும் நீரே தான் தலைமை ஏற்பீர்
உள்ளி அவர் வழி ஒன்றே உண்மை என்று
உணர்ந்தால் நீர் உலகத்தின் உயரே நிற்பீர்


பிறப்போடு இறப்பதனைக் கணக்கெடுக்கும்
பேரேடு அரசாங்கக் கையில் உண்டு
பொறுப்பாக அவர் எடுக்கும் கணக்கை நம்பி
பூமியிலே வாழ்கின்றார் மனிதரெல்லாம்
சிறப்பாக இதை விட்டு வள்ளுவனார்
செய்கின்றார் இப் பணியைத் தனி ஆளாக
கடுப்பாகிப் போயிடுவார் சிலரும் கண்டால்
கலகலத்துச் சிரிப்பீர்கள் நீங்கள் கண்டால்


உயிரோடு ஊரினிலே உயர்ந்தவராய்
உலவுகின்ற பல பேரை வள்ளுவரும்
அயராமல் சவக் கிடங்கில் வைக்கச் சொல்லி
அரசுக்கு ஆணையொன்றை அருளிச் செய்தார்
பயிருக்குள் களை போல வாழுகின்ற
பணம் படைத்தோர் மற்றவர்க்கு உதவி வாழார்
உயிரோடு இருந்தாலும் செத்தார் என்றே
உரைக்கின்றார் உறைக்கட்டும் உலகுக்கென்றே



படிப்பதற்கு உதவியின்றி தவிக்கும் ஏழ
பக்க த்திலே இருந்தும் உதவ எண்ணார்
அடி வயிற்றுப் பசியதனால் கலையிருந்தும்
அறிவிருந்தும் அழிவாரைக் காக்க எண்ணார்
கடி மணத்தைக் காணவொண்ணா ஏழ்மையிலே
கதறி நிற்கும் கன்னியர்க்கு உதவி செய்யார்
பெரியவராய்ப் பணம் கொண்டு வாழ்ந்தாரேனும்
பிணம் என்று கிடங்கினிலே வைக்கச் சொன்னார்


குறள்
ஒத்ததறிவான் உயிர் வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்

பழம் பாடல் புதுக்கவிதை முத்தொள்ளாயிரம்

            காதல்  வசப் பட்டாலே  பேசுதலில்
                  கணக்கில்லை  வழக்கில்லை  நேரமில்லை
            பாதகமேயில்  லாமல்  யாரிடத்தும்
                  பகன்றிடுவார்  தம்  உள்ளத  தெண்ணமெல்லாம்
            ஆதரவு  தேடுகின்றாள்  ஆசைப் பெண்ணாள்
                  யாரிடத்து  என்பதிலே தான்  புலவர் நின்றார்
             மாதவத்தான்  பாண்டியனின்  குதிரையோடு
                  மங்கை நல்லாள்  பேசுகின்றாள்  வேண்டுதல்தான்



             புகழ்ந்து  பின்னர்  வேண்டினால் தான்  நலம்  விளையும்
                   புரிந்தவளாய்ப்  பேசுகின்றாள  மங்கை  நல்லாள்
             அகம்  நிறைந்த  முகம்  காட்டிப்  பேசுகின்றாள்
                   அறிவாக  தெளிவாக  ஆர்வமாகப்
              புகழ்  உன்னால்  பாண்டியர்க்கு  போர்க்  களத்தில
                    புலவரெல்லாம் உனைத்தானே  பாடுகின்றார்
              தகும்  அங்கு  காட்டுகின்ற  வேகமெல்லாம
                    தரணி  வெல்லப்  போர்க்களத்தில் - ஊருக்குள்ளே


              கதவிற்குப் பின்னாலே  நின்றவனைக்
                    கண்டு  வாழக்  காத்திருக்கும் எனக்கு எல்லாம
              இதம்  செய்ய  வேண்டாமா  கொஞ்சம்  எண்ணு
                    எல்லாமே  போர்க் களமா மெல்லச்  செல்லு
              வதம் செய்ய  நாங்கள்  என்ன  எதிரிகளா
                    வடிவழகே  மெதுவாய்  நீ  நடத்தல்  ஒன்றே
               பதம்  செய்யும்  எங்களையே  பாண்டியனைப்
                     பார்த்திடுவோம்  உயிர் வாழ்வோம் நன்மை செய்க


                                        செய்யுள்

              போரகத்துப்  பாயு  மா  பாயாது  ஒரு படியா
              ஊரகத்து  மெல்ல  நடவாயோ-பார
              மத வெங் களியானை  மாறன்  தன்  மார்பம்
              கதவங் கொண்டு  யாமும்  தொழ
              

Friday, May 23, 2008

உண்மை வீரர்

              விடுதலைக்காய்ப்  போரிட்ட  வீரர்  தம்மின்
                     விடுதலைக்காய்  நீதி மன்றம் தன்னில்  நின்றார்
              பழுதில்லா மனத்திற்குச்  சொந்தக் காரர்
                      பார்த்தாலே  உறுதியினைக் காட்டும் தோற்றம்
              வருகிறது  ஒரு  தந்தி  அவருக்கென்று
                      வந்ததனை  வாசித்தார்  பையில்  வைத்தார்
              விறு விறுப்பாய்  வாதங்கள்  தன்னை வைத்தார்
                       வீரர்களின்  விடுதலைக்காய்  அடுக்கடுக்காய்


              வெள்ளையர்  தான்  நீதிபதி இருந்த  போதும
                        விரிவான  விளக்கங்கள்  கேட்டு  நின்றார்
              அள்ளி வைத்த  வாதங்கள்  அனைத்தும்  கேட்டு
                         அடுத்து  ஒரு  நாள்  குறித்தார்  வழக்கிற்காக
               மெள்ள  அந்த  தந்தி என்ன  அய்யா  என்றார்
                          மென் நகையாள்  என் மனைவி மறைந்தசெய்தி
                சொல்லி விட்டு பின்னர்தான்  கிளமபிச் சென்றார்
                           ஜோதியவர்  வல்லபாய்  படேலே  அய்யா
                           
                           
                        

பழம் பாடல் புதுக்கவிதை முத்தொள்ளாயிரம்

                 பழகி விட்ட  பழக்கங்களை  விடுவதற்கு
                          படுகின்றார்  மனிதர்களே  துன்பம்  என்றால்
                 அழகு மிக்க  ஆண்  ஆனை  சேரனது
                          ஆர்ப்பாட்டப்  போரில் வெற்றி சேர்க்கும் ஆனை
                  பழகு  தமிழ்  அழகு  அதன்  நடையழகு
                           பார்த்தவர்கள்  தொழுது  நிற்கும்  தனி  அழகு
                  உழுது  நிற்கும்  பகைவர்களின்  மார்பை  எங்கும்
                           ஒரு நொடியில்  பகை  அழிக்கும்  வீர  ஆனை



                  முழு   நிலவு    நாள்  தோறும்  அழகு  ஆனை
                           முரடாக  மாறி நிற்கும்  தன்மை கேட்பீர்
                   பழுதின்றி  பகை  நாட்டு  மன்னர்  தம்மின்
                           பளபளக்கும்  வெண்குடையைப் பறித்தெறிந்து
                   தொழுதவரைப்  பணிய வைத்த  பழக்கத்திலே
                           தும்பிக்கை  தனைக் கொண்டு  நிலவும் ஏதோ
                    வழுவான பகை  நாட்டார்  குடைதானென்று
                           வலிந்ததனைப்  பறித்திடத் தான் முயல்கிற்தாம்



                                       முத்தொள்ளாயிரம்


                வீறு சால்  ம்ன்னர்  விரிதாம  வெண்குடையை
                பாற  எறிந்த  பரிசயத்தால்-தேறாது
                செங்கண்  மாக்கோதை  சின வெங் களி ஆனை
                 திங்கள்  மெல்  நீட்டும்  தன்  கை

Thursday, May 22, 2008

பாடுகின்றான்

            பாடு்கின்றான்  வயிற்றினிலே  தாளம் போட்டு
                      பாவி மகன்  நடுத்தெருவில்  பாடுகின்றான்
            கூடுகின்றார் மக்களெல்லாம்  அவனைச் சுற்றி
                      கொடுக்கின்றார்  அவரவர்க்கு ஏற்றவாறு
             ஆடுகின்றார்  சிலர்   அவனின்  பாட்டைக் கேட்டு
                       அப்பா  அப்பா  என்றே போற்றுகின்றார்
              நாடி  நின்ற  பாட்டையெல்லாம்  பாடுகின்றான்
                        நாலரைக்  கட்டை  சுதியும்  விலகிடாமல


              வேகாத வெயிலினிலே  பாடுகின்றான்
                        விலகாத  சுதியதனின்  பெருமையோடு
              பாகாக  உருகி   அவன் பாடுகின்றான்
                         பஞ்சமமும்   மத்திமமும் ஷட்சமும்
              வாகாக  அவனோடு  வாழ்வதனை
                         வழியறிவார்  தொகையறிவார் புரிந்து கொள்வார்
              சாகாமல்  வாழ்வதற்காய்ப்  பாடுகின்றான்
                           சங்கீதம்   வாழ்கிறது  மகிழச்சியோடு



            ஆகாரம்  பெற்று விடப்  பாடுகின்றான
                           ஆகாவென்றே  பலரும்  ஆடுகின்றார்
            வாகான  குரல்  தந்த  இறைவனையே
                            வாழ்த்தி  யவன்  மனமுருகிப்  பாடுகின்றான்
             நோகாமல்  குளிர்   நிறைந்த   அரங்குகளில்
                             நூறாக  ஆறாகப்  பாடுவீரே
              சாகாத இவன்  பாட்டைக்  கேட்டால்  பின்னர்
                             சங்கதிகள்  பொய்யென்று  உணர்வீர்  நீரே
              

வேண்டும்

             அன்பு  தனை  அள்ளித் தர   அன்னை  வேண்டும்
                    அன்னையவள்   அலுவலகம்  செல்ல  வேண்டும்
             பண்பு  தனைச்  சொல்லித் தர  தந்தை  வேண்டும்
                    பணி  நிமித்தம்   தந்தையுமே  செல்ல வேண்டும்
             கண்மணியே  என அணைத்துக் கதைகள்  சொல்லி
                    காப்பாற்ற பாட்டியுடன்  தாத்தா  வேண்டும்
             புண்பட்டு  ஏக்கத்தின்   கூட்டத்தோடு
                    புழுங்கி  நின்றாரவர்  முதியோர்  இல்லம் தன்னில்

பழம் பாடல் புதுக்கவிதை முத்தொள்ளாயிரம்

           தெங்கிள நீர்  மார்பகத்துப் பெண்ணாளவள்
                     சேர்ந்து  விட்டாள்  பாண்டியனைக்    கண்ட  அன்றே
            மங்கையவள் மனத்திற்குள்  பாண்டியனார
                      மகிழ்ச்சி மிகக் கொண்டிருந்தும் நேரில்   காணாச
           சங்கடங்கள்  சில  நேரம்  வருவதுண்டு
                      சதி செய்து அன்னை  யவள்  தடுக்கும்  நேரம்
          இங்கவளும்  சொல்லுகின்றாள்  அன்னை  யவள்
                      ஏமாந்து நிற்கின்ற  செய்தி  தன்னை


           கதவடைத்து வைப்பாளாம் அங்கும்  இங்கும்
                      காவலுக்கு  நிற்பாளாம்  பெற்ற பெண்ணை
           நிதம்  அடைத்து  வைப்பதையே  நீட்டிப்பாளாம்
                      நெஞ்சு  அவன்  பின்னாலே  சென்று  விட்ட
           விதம்   அறியா  மடமையிலே  காடை தன்னை
                       வேடர்களும்  கூடிட்டு  மூடி  வைக்க
            இதமாகக் கீழிருக்கும்  மண் பறித்து
                         எப்போதோ  காடையது  பறந்தாற்  போல
                       
                                      முத்தொள்ளாயிரம்


                  கோத்தெங்கு  சூழ் கூடல்  கோமானைக் கூட என
                  வேட்ட்டங்க்குச் சென்ற  என்  நெஞ்சறியாள்-கூட்டே
                   குறும்பூழ்  பறப்பித்த  வேட்டுவன் போல்  அன்னை
                    வெறுங்கூடு  காவல்  கொண்டாள்      
         

Wednesday, May 21, 2008

ஒழிந்தே போவீர்

          ஏழைகளை  மீண்டும் எங்கும்  ஏய்க்கின்றார்கள்
                       ஏய்த்தவர்கள்  இங்கேயே  வாழ்கின்றார்கள்
          கோழைகளாய்  அவர்களிடம்  கையையேந்தி
                        கூட்டாளியாகி  நின்றார்  படித்தவர்கள்
           வாழையடி  வாழையென திருடர்  முன்னே
                         வதை பட்டு  வாழ்வது தான்  ஏழை  வாழ்வா
             ஏழைகளே  ஒன்றாவீர்   ஆகி விட்டால்
                           ஏய்ப்பவர்கள் அடியோடு ஒழிந்தே  போவார்

மறைந்தே போவீர்

       விஷத்தோடு  விஷம்  சேர்த்து  அருந்தி விட்டு
                    வீழ்ந்திறந்தார்  ஏழை  மக்கள் அய்யோ  பாவம்
        திசை  தோறும்  இக் கொடுமை பல  விதத்தில்
                      திண்டாட  வைக்கிறது  ஏழை  வாழ்வை
         பசையுள்ளார்  விற்கின்றார்  விற்பதற்கு
                       பாதுகாவல்  காவலரே  என்கின்றாரே
         வசையிதனை  ஒழிக்காமல்  வாழ்ந்தீரென்றால்
                       வாழ்ந்தென்ன  செத்தவுடன்  மறைந்தே  போவீர்

கவலையிலும் அவன் ஞானி

               உரத்த  குரலெடுத்து  உண்மைகளைப்  பேசி  நின்ற
                          கருத்த  திரு மேனி  கவலையிலும்  அவன் ஞானி
               எடுத்த  கொள்கையிலே  இறுதி வரை  தன்  வாழ்வைக்
                          கொடுத்த  பெருந்தோழன்  கூறு  தமிழ்  நல்லாசான்
               அடுத்த  வேளைக் கென்றாரிடமும்   செல்லாது
                           படுத்தும் வறுமையிலும்  பாடி நின்ற  போர்க் கவிஞன்
                தொடுத்த  கவிதையெல்லாம்  தோழருக்காய்  என்றளித்து
                           மிடுக்கு  நிறைந்தானாய்  மீசையினை  முறுக்கி நின்றான்



                எடுத்துப்  பாரதியை  எங்கும்  அவன்  பேசையிலே
                            கருத்த  பாரதியாய்  கர்ஜனைகள்  செய்வான்  காண்
                 தொகுத்துக்  கம்பனது  தூய  தமிழ்  தூவையிலே
                            பழுத்த  தமிழறிஞர்  பாடி நிற்பார்  இவன் புகழை
                  கடுத்த  வறுமையினை  காரல்  மார்க்ஸ்  வழியினிலே
                            துடைத்து  எறிவதற்காய்த்  தோழர்  அவர்  வாழ்ந்தார் காண்
                  படித்த  பள்ளிகளோ  பாரதத்தின்  வீதிகளே
                             படைத்திங்கு  அளித்ததுவோ  பாட்டாளி  நீதிகளே

                  எழுத்ததனால்  காந்தியினை  இழுத்தான்  தனைக்  காண
                             பழுத்த  அவர்  இவனைத்தான்  பாரதத்தின்  சொத்து  என்றார்
                   தொடுக்கும் நல்ல  வாதத்தால்  எவரையுமே  தமதாக்கும்
                             தோழர்   இவர்  எனச் சொல்லி  பெரியாரும்  பூரித்தார்
                    அழுத்தமவர்  கொள்கையிலே  அன்போ  தம்  செய்கையிலே
                             வருத்தும்  வறுமையிலும்  வாழ்வாங்கு  வாழ்ந்த்தார்  காண்
                    தொடுத்து  இவர்  புகழைத்  தோழரெல்லாம்  பாடுங்கள்
                              தோழரென்றால்  ஜீவாதான்  என்று  எங்கும்  ஆடுங்கள்
                             

பழம் பாடல் புதுக் கவிதை முத்தொள்ளாயிரம்

            ஆண்டு  நிற்கும் சோழனவன்  அரச  குலத்தானை
                     அவனியெல்லாம்  வெல்லுதற்கு பழகி  நின்ற ஆனை
            தாண்டி  அது  போர்க் களத்தில்   பாய்ந்து  வரும்  நேரம்
                      தலைகளோடு குடல்களுமே  துண்டாகிப் போகும்
            வேண்டி  அதைப்  பணிந்து  நின்றால்  பிழைத்தார்கள்  இல்லை
                      விரைவாக  உடலழிந்து உயிரிழப்பார்  கண்டீர்
             காண்பதற்கு  அதைப்  போன்ற  களிறு  ஒன்று  இல்லை
                       கை தொழுது  நிற்பார்கள்  நாட்டிலுள்ள நல்லோர்


             பவனியிலே  அது  அசையும்  கம்பீரம்  கண்டு
                       பார்ப்பவர்கள்  அனைவருமே மெய்  சிலிர்த்து நிற்பார்
             அவதி  அது  தந்த  தங்கு  பாகர்களுக  கன்று
                       அரசனது  பவனிக்கு  வர  மாட்டேனென்று
             புதிது  இது  பாகருமே  புரியாமல்  நின்றார்
                        புலவருக்கோ  புரிந்த  திது   புனனகைத்துச் செனறார்
             அரிதான  இச்செய்தி   மனதினிலே  கொண்டு
                        அரசற்குச் சொல்வதற்கு  அரண்மனைக்குள் சென்றார்


             போரினிலே  பகை  மன்னர்  கோட்டைகளின்  கதவை
                         பொறுப்பாக  தந்தத்தால்  பேர்த்தெடுத்த  போது
              சீர்  கெட்டுப்  போன  அந்தத்  தந்தத்தினோடும்
                          சிரங்களையே  கால்களினால் துவைத்தெடுத்த  போது்
               பேர்  பெற்ற  பாதங்கள்  நகமழிந்து  போக 
                           பெண்  ஆனை  முன்னாலே  வருவதற்கு வெட்கி
                ஊர் கோலம்  வருவதற்கு   மறுத்தங்கு   ஆனை
                             உள்ளதென்ற  உண்மையினை உவப்போடு  சொன்னார்


                            முத்தொள்ளாயிரம்


           கொடி மதில்  பாய்ந்திற்ற  கோடும் அரசர்
            முடியிடறித்  தேய்ந்த  ந்கமும்-பிடி முன்பு
            பொல்லாமை நாணிப்  புறங்கடை  நின்றதே
            கல்லார்தோட்  கிள்ளி  களிறு
             

கம்பரும் கண்ணதாசனும்

இது எனது முதல்..ஒலி வடிவப்பதிவு....

கம்பரும் கண்ணதாசனும் என்ற தலைப்பில் பேசிய உரையின் முதல் பாகம்...!

Get this widget | Track details | eSnips Social DNA

Tuesday, May 20, 2008

சாதியினை ஒழித்தார்

         காந்தியவர்  ஆசிரமம்  காலை வேளை
                 கவனமற்ற  துயரம்  ஒன்று  மாறும்  காலை
         ஏந்தி  ஒரு மலச சட்டி  தலையில்  கொண்டு
                 ஏலாத இளஞ் சிறுவன்  நடந்து  வந்தான்
          சாந்தி  கொண்ட அம் மனிதர் பிராம்மணர்தான்
                 சட்டென்று   அச்சிறுவன்  தனை  நிறுத்தி
          வாங்கி  அந்த  மலச் சட்டி  தலையில் கொண்டார்
                 வார்தாவே  தனை  உணர்ந்து  மாறி  நிற்க


          காந்தியவர்  கை  கூப்பித்  தொழுது  நின்றார்
                  கருணையதை  உணர்த்தி நின்ற  கண்ணியரை
          ஆம்  தினமும்  ஆசிரமம்  தன்னில்  உள்ளோர்
                  அள்ள  வேண்டும் மலம் என்றும் ஆணையிட்டார்
          காந்திக்கே  குரு அவர்தான்  என்றும்  சொன்னார்
                   கனிவுக்கே  தாயான  வினோபா தன்னை
          போந்தவரைப்  போற்றி  நிற்போம் மலத்தை  அள்ளல்
                   பொது என்று  சாதியினை  ஒழித்தார் தம்மை

பழம் பாடல் புதுக்கவிதை முத்தொள்ளாயிரம்

              பாண்டியன்  வருகின்றான்  வீதி வழியாய்
                          பாய்ந்தோடும்  குதிரையில்தான்  மிக  விரைவாய்
              காண்பாள்  தன்  மகள்  பின்னர்  துன்பம்  நேரும்
                          கணக்கிட்ட  தாய  வளும் கதவடைத்தாள்
              வான்  பார்த்த  பயிர்   போல  பாண்டியனின்
                          வரவிற்க்காய்க்  காத்திருந்தாள்     பதறி நின்றாள்
               தானவளை  அடைத்து வைத்த  காரணத்தால்
                           தாயவளோ மகிழ்ந்திருந்தாள்  காவல்  தன்னில்



               பாண்டியனும்  போன பின்னர்  தாயும்  வந்து்
                            பக்குவமாய்க்  கதவினையே திறந்து வைத்தாள்
               தூண்டில்  இட்ட  மீன்  போல்  பெண்ணோ  அங்கு
                            துடித்திருப்பாள்  என்றவளோ  அதிர்ந்து  நின்றாள்
               பாண்டியனைப்  பார்த்தவளாய்  மகிழ்ச்சியோடு
                             பாவை யவள்   பாடி நிற்க வியந்து  நின்றாள்
               காண்பதற்கு  வழி ஏது  என்று அன்னை
                             கவனிக்கக்  கதவினையே  காட்டி  நின்றாள்


                சாவிக்காய்  உண்டான  பெருந  தொளையில
                             சரித்திரத்துப்  பாண்டியனைப்  பார்த்து  விட்டாள்
                ஆவியினைக்  காப்பதற்காய்  தொளையைப்  போட்ட
                             அப்பெரிய  நல்லவர்க்கு என்ன   செய்வேன்
                சாவிக்காய் போட்ட  தொளை  இவளுக் கென்றே
                             சரியாகப் போட்டதாகக்  கருதுகின்றாள
                தேவி   அந்தப்  பெரியவர்க்கு  நன்றி  சொல்லத்
                             தேடுகின்றாள் கைம்மாற்றுக் கடனைத் தீர்க்க


                                             முத்தொள்ளாயிரம்

                     காப்படங்கென்றன்னை  கடிமனை  இல்ச்செறிந்து
                     யாப்படங்க  ஒடி  அடைத்த பின்  -  மாக்கடுங்கோன்
                     நன்னலம்  காணக்  கதவம்  தொளை  தொட்டார்க்கு
                     என்னை  கொல்  கைம்மாறு  இனி

Monday, May 19, 2008

எங்கள் ஜீவா

                  உண்மையாய்  வாழ்வதற்கே  உதித்த  தோழன்
                         உயர்  குணத்தான்  நற்றமிழான் சொல்லில் வல்லான்
                   கண்களிலே  ஆறாக  நீரே  ஒடும்
                         கவலைகளே  கொண்டிருந்தும் நேர்மை  கொண்டான்
                   பண்பினிலே  மிகச் சிறந்தான்  இறுதி வரை
                         பகட்டின்றி  வாழ்ந்திருந்தான்  வறுமை  தன்னை
                   நண்பனெனக்  கொண்டிருந்தான்  உதவுதற்கு
                         நாட்டினிலே  பலர்  வந்தார் மறுத்தே வென்றான்


                   விடுதலைக்காய்  சிறை சென்றான்  ஏழ்மையினை
                          வேரறுக்கத் தனையே   தான்  தந்து  நின்றான்
                    சிறுமைகளை  எதிர்ப்பதிலே  சீறி நின்றான்
                           செஞ்சட்டை  முதல்  தமிழன்  அவனே  யென்றான்
                    கடுமைகளைத் தண்டனையாய்  அடைந்த  போதும்
                            கலங்கவில்லை மென்மேலும்  எதிர்த்து  நின்றான
                    அடிமை  விலங்கறுப்பதையே  மூச்சாய்க் கொண்டான்
                             அன்பர்  எங்கள்  ஜீவாவே  அன்றும்  வென்றார்

                     

பழம் பாடல் புதுக் கவிதை முத்தொள்ளாயிரம்

             முத்து களுக்  கரசன்  பாண்டியனை
                    முலை தாங்காச்  சிற்றிடையாள்  பார்த்து விட்டாள்
              கத்துங்  கடல்  வாழும்  சங்கினத்தால்
                     கை  வளைகள்   கொண்டிருந்தாள்  வேர்த்து விட்டாள்
              பத்து  பதினைந்து  நாள்  கழிந்தும்
                     பாவி மகன்  பவனியில்லை  சோர்ந்து விட்டாள்
              செத்தொழிந்து விடுவாள்  போல் காட்சி  தந்தாள்
                     செவ்விதழாள் துன்பமதைச் சேர்த்து நொந்தாள்


              கைவளைகள்  கழன்று  விழும்  உடனிருப்போர்
                       கண்டு விடத் தம்  காதல்  தெரிந்து விடும்
              மை விழியாள்  துடிக்கின்றாள்  அந்த  நேரம்
                       மன்னவனின்  சங்கொலியோ  பூம்  பூம்  என்னும்
               அய்யமில்லை  உறவுக்காய்  உறவு  வந்து
                        அன்போடு  தன்  உறவைக் காக்கும் என்ற
                பொய்யில்லா  அம்மொழியைப் புரிந்து கொண்டேன்
                         பொற் சங்கு கைச் சங்கைக்  காத்தது  பார்

                 சொல்லுகின்றாள்  அப்பெண்ணாள் புரிந்தீரோ  நீர
                          சோகமதில்  கை வளைகள்  கழலும்  நேரம்
                  மெல்லிடையாள்  வளைச் சங்கை  பாண்டியனின்
                           மேலான சங்குவந்து  காத்ததென்று
                  வெல்லுகின்ற  தொழில்  ஒன்றே  கொண்ட  வேந்தன்
                           வீதி  வலம்  வருகின்றான்  என்றுணர்த்த
                   நல்லொலியாய்ச் சங்கொலிக்க  வளைகள்  நிற்க
                            நலம்  கொண்டாள்  பாண்டியனைக் காண்போம் என்று
                  
                         

                                     முத்தொள்ளாயிரம்

                செய்யார்  பிறர்  எனினும்  செய்வர்  தமர்  எனுஞ் சொல்
                 மெய்யாதல்  கண்டேன்  விளங்கிழாய்  -  கையார்
                 வரிவளை  நின்றன  வையையார்  கோமான்
                  புரிவளை  போந்து இயம்பக் கேட்டு
                          

Sunday, May 18, 2008

எப்படிப் பதிவு செய்திடுவேன்

              வானக் கடலின்  வெண்மேக  அலைக் கூட்டம்
                           மோன மலைக் கரை  மோதக் கண்டேன்  அதன்
               கீழக் கரை  விட்டு  சோதிக் கதிர்ப் படகு
                            மேலைக் கரை  தன்னில்  சேரக் கண்டேன்
               வேளை  மாலை யெனும்  நாளை  வந்து  விடும்
                             வீண்  ஒரு  நாள்  என  மனம்  சொல்லும்
                ஏழை  என்  வரவினை  இந்த  உலகினில்
                               எப்படிப்  பதிவு  செய்திடுவேன்



              அனைவருக்கும்  எனது  பணிவான  வணக்கங்கள்.
               14 வயதில்  நான்  எழுதிய  முதல்  கவிதை இது.

திறனே கொள்வோம்

             தாய் தந்தை  தமை  நாமே  தேர்ந்தெடுத்து
                       தனியாகவா பிறந்தோம் இங்கே  வந்து
             ஊன் தந்த உடல்  கொண்ட  உணர்வதனால்
                       உறவானார்  இருபேரும்  உருவானோம்  நாம
              ஏன் பெற்றீர்  எனக்  கேட்க  இடமுமில்லை
                       எத்தனை  நாள்  வாழ்க்கை  என்ற கணக்குமில்லை
              தேன்  கொண்ட வார்த்தை  கொண்டு  இல்லார்க்கெல்லாம்
                         தெரிந்த  வரை உதவி வாழ்வின் திறனே கொள்வோம்

பழம் பாடல் புதுக்கவிதை ஆண்டாள்

      இல்லாதார்  பிச்சையெடுத்தேங்கி  ஏங்கி
                 எவ்விடத்தும் அலைகின்றார் அய்யோ  பாவம்
      பொல்லாதார்  இங்கொருவர்  பிச்சையேற்று
                  புவனமெலாம்  அலைவதிலே  நீதியுண்டோ
       நல்லாரே  கேட்டிடுவீர்  உம்மோடன்றி  
                   நான்  இதனை  யாரிடத்தில்  சொல்ல  ஏலும்
       வல்லார்கள்  பிச்சையென்று  வந்து விட்டால்
                   வரை முறைகள்  இல்லாமல்  பிடுங்குகின்றார்



       கொடுக்கின்ற  வாழ்வளித்தான்  இறைவன்  என்று
                    கொள்ளாமல்  தான்  என்ற உணர்வு  ஒங்க
        மிடுக்காகத் தான்  அலைந்தான்  மாவலியும்
                     மீட்டவனுக்காய் அங்கு  அருளே  செய்ய
        தடுத்தவனை ஆட்கொள்ள  மிகச்  சிறிய
                      தனி வடிவம் கொண்டு வந்து  பிச்சையேற்றான்
        எடுத்த  பிச்சை  மூன்றுலகும் கொண்ட  பிச்சை
                       இருந்தும் எந்தன்  வளையலையும் பிச்சை  கொண்டான




         கொடுப்பவரைத் தேடி  அன்றோ  பிச்சை தன்னைக்
                        கொள்பவரக்ள்  வர வேண்டும்  அதனை விட்டு
          இருக்கின்ற  இடத்திருந்து  பிச்சை  தன்னை
                         எடுப்பதிலே  நியாயம்  உண்டோ சொல்வீர்  அய்யா
          பொறுக்காத   காதலினால்   மெலிந்தழிந்து
                          போனதனால்  கை வளைகள்  கழன்று போக
           எடுத்தவனே  கண்ணனென்றும்  பிச்சை  தன்னை
                            ஏற்பதற்கு  எனைத் தேடி  வருதல்  தானே

            பொருத்தம்  அதை  விட்டு எங்கோ  இருந்து  கொண்டு
                             போடு  பிச்சை  எனற்வனே  எடுத்துக கொள்ளல
             வருத்தம்  தரும்  என்னைப்  போல  அவனுக்கென்றே
                              வழங்குதற்கு  பிறந்தார்க்கு  யார்தான் சொல்ல
              கருத்த  மேனிப் பேரழகன்  கண்ணன்  என்னும்
                                கனி வாயன்  குழல்க் கையன்  தன்னை  இங்கு
              திருத்தமாகத் த்மிழ்க் கவியில்  பாடுகின்றாள்
                                 திருவில்லிப் புத்தூரில்  பிறந்த  ஆண்டாள

                                                         செய்யுள்

                            மச்சணி  மாட மதில்  அரங்கர்  வாமனனார்
                            பச்சைப்  பசுந் தேவர் தாம்  பண்டு நீரேற்ற
                            பிச்சை  குறையாகி  என்னுடைய்  பெய் வளை மேல்
                            இச்சை யுடையரேல்  இத்தெருவில்  போதாரே

Saturday, May 17, 2008

வழியேயில்லை

          ஆசையினால்  மனிதர்  படும்  பாட்டையெல்லாம்
                       அன்றாடம்  பார்க்கின்றோம்  செய்தியாக
          ஒசையின்றி  ஏய்ப்பார்கள்  தினம்  தினம் தான்
                        உருவாகி  வருகின்றார்  நல்லார்  போல
           பாசமெல்லாம்  காட்டுகின்றார்  பல விதத்தில்
                        பைத்தியமாய்  ஆக்குகின்றார். படித்தார் கூட
           காசு  வரும்  என்ற  பெரும்  ஆசையினால்
                        கைக்காசும்  கடனும்  கொண்டு  அழிகின்றாரே


           வருகின்ற  வரவிற்குள்  வாழ்க்கைதன்னை
                         வரமாக  வாழ்வதற்கோர் வாய்ப்பைக் கொண்டு
            தருகின்றான்  இறைவன்  இது போதும்  என்று
                          தரமாக   வாழாமல்   ஆசை கொண்டு
            வருவாரும்  போவாரும்  காட்டுகின்ற
                          வாயழகில்  எல்லாம்  நீர்  வீழ்ந்தீரென்றால்
             அருவருத்து  உமை ஒதுக்கி  வைப்பதன்றி
                          அனுதாபம்  கொள்வதற்கு வழியே யில்லை
                           

பழம் பாடல் புதுக்கவிதை ஆண்டாள்

          அழுகின்றேன்  தொழுகின்றேன்   என்ற போதும்
                       அருகில்  வந்து  அரவணைத்து அன்பு செய்து
          பழுதின்றி  அஞ்சாதே   எந்தன்  கண்ணே
                        பார்வையெல்லாம்  உன் மேலே  என்றே  சொல்லி
          வழுவில்லா  என்  காதல்  தன்னை  ஏற்று
                        வாயமுதம்  தந்து  என்னை  ஆதரித்து
           கழுவாயைத் தீராமல்  மீண்டும்  ஏய்க்கும்
                         கண்ணனது கொடுமைகளை  அறிவீரோ    நீர்



           இருந்தாலும்  தினம்  வந்து  என்னைச் சுற்றி
                          இழுத்தணைத்து  என் மார்பை  இடையை நல்ல
           விருந்தாகிக் கொள்கின்றான்  என்றாற் போல்
                           விதம் விதமாய்  நானாக  எண்ணிக் கொள்வேன்
          மருந்தாகும் அவன்  வாயின்  அமுதம்  தன்னை
                            மன்னன்  அவன்  வாய்க் குழலே  கொள்ளை  கொள்ளும
           அருந்தாத அவன்  வாயின் எச்சில்  தன்னை
                            அக்குழலில்  இருந்தெடுத்து  முகத்தில  பூசும்


           கனி வாயின்  எச்சில்  ஒன்றே  தனக்குள் உள்ள
                             காம  வெறி  அத்தனைக்கும் தீர்வேயாகும்
           எனச் சொல்லி  வேண்டுகின்றாள்  ஆண்டாள் ஆங்கே
                              எப்போதும்  துணை  நிற்கும்  தோழியிடம்
           தனிப்பாடல்  இப் பாடல்  ஆண்டாள்  எனும
                               தங்க மகள்  தன்  மொழியில்  தந்த  பாடல்
           இனிப்பான  இப்பாடல்  தன்னைக்  கொள்ள
                               என்ன  தவம்  செய்தானோ  கண்ணன்  அன்று



                                                        செய்யுள்

                         அழிலும்  தொழிலும்  உருக்காட்டான்
                                   அஞ்சேல்  என்னான்  அவன்  ஒருவன்
                          தழுவி முழுகிப் புகுந்தென்னைச்
                                    சுற்றிச்  சுழன்று  போகானால்
                          தழையின்  பொழில்  வாய்  நிரைப்பின்னே
                                     நெடுமால்  ஊதி வருகின்ற
                          குழலின்  தொளைவாய்  நீர்  கொண்டு
                                      குளிர் முகத்துத் தடவீரே
 
           

            

Friday, May 16, 2008

காப்பாற்றி நின்றார்

         பிச்சையெடுத்தேனும்  நல்ல  கல்வியினைப்
                     பெற்றிடுங்கள்  என்று சொன்னார்  நமது  முன்னோர்
         இச்சொல்லை மாற்றுதற்காய்  ஒருவர்  வந்தார்
                      ஏழைகளை  வாழ வைக்க  என்றே  வந்தார்
         பிச்சையினை  நான்  எடுப்பேன்  உங்களுக்காய்
                       பிள்ளைகளே  உங்கள்  தொழில்  படித்தல்  என்றார்
         கச்சை  கட்டி  கல்வி  தந்து  ஏழைகளைக்
                       காப்பாற்றி  நின்ற தெங்கள்   காமராஜர்
                      

பழம் பாடல் புதுக்கவிதை முத்தொள்ளாயிரம்

        பதினெட்டு  வயதேதான்  பாண்டியர்க்கு
                பையனென்று  கேலி  செய்தோர்  நாடிழந்தார்
       கதியற்றுப்  போனார்கள்  இளைஞனென்று
                கணக்கிட்டோர்  களி  யானைத் தென்னன்  முன்னே
       விதி கெட்டுப்  போனவர்கள்  வாய்க் கொழுப்பால்
                வீடிழந்தார்  நாடிழந்தார் வீதி  சேர்ந்தார்
       மதிகெட்டுப்  போனாரின்  நாட்டையெல்லாம்
                மன்னன் அவன்  கொண்டதிலே  நியாயம்  உண்டு



      கதி கெட்டேன்  நான்  அவனைக் கண்ட பின்னர்
                கை  தொழுது  அவன்  காதல்  வரமே கேட்டேன்
      பதி நான்தான்  என்று  சொல்லி  என்னை  வந்து
                பக்குவமாய்  ஏற்றிடுவான்  என்றே  நின்றேன்
      விதி விதி  பார்  எந்தனது  நிறமே  கொண்டான்
                வீரனவன்  செய்கை  இது  நியாயம்தானா
      எதிரிகளின்  பார்  பறித்தான்  இகழ்ந்ததாலே
                 ஏந்திழை  நான்  பணிந்து  நின்றும்  நிறம் பறித்தான்

      மாந்தளிரின்  நிறம்  பறித்தான்  மனம்  பறித்தான்
                  மங்கையெந்தன்  நலமெல்லாம்  பறித்துக்  கொண்டான
      சாந்துணையும்  அவன்  துணைதான்   என்று  முன்னே
                  சரணடைந்து  நின்றாளைக்  கொன்றே  போட்டான்
      வேந்தனவன்  செய்கையிதில்  நியாயமுண்டோ
                  வேதனையைச் சேர்த்ததிலே  பண்புமுண்டோ
       ஆம்  தமிழாள்  கேட்கின்றாள்  என்ன  சொல்வீர்
                   அகம்  அறிந்த  தமிழர்களே  உம்மைக் கேட்பேன்


                                   முத்தொள்ளாயிரம்


                    களியானைத்  தென்னன்  இளங்கோ  என்று  எள்ளிப்
                    பணியாரைத் தம்  பார் இழகக  -  அணி  ஆகம்
                    கை தோழுதேனும்  இழக்கோ  நறு மாவின்
                    கொய் தளிர்  அன்ன நிறம்
      

Thursday, May 15, 2008

நல்ல வேளை

      சங்க காலப் புலவருக்கும்  வள்ளுவனாம்
             சரியான வழி சொன்ன  தலைவனுக்கும்
      பங்கமில்லாக்  காப்பியத்தின்  இளங்கோவிற்கும
             பாடி நின்ற  பெரும் புலவர்  அனைவருக்கும்
      இங்கு ஒரு வரலாறு  இல்லையென்றே
             ஏக்கங்கள்  கொண்ட்துண்டு  ஒரு காலத்தில்
      தங்க நிகர்  தமிழ்த்  தாயே  காத்து விட்டாள்
              தமிழர்  அவர்  தமிழர்  என  வாழ்வதற்காய்



      பாரதியோ  பார்ப்பான்  அவர் தாசனோரோ
               பள பளக்கும்  துணி  அளிக்கும்  முதலியார் காண்
      ஊரறிய  நாட்டிற்காய் த் தன்னைத் தந்த
               உத்தமராம்  காமராஜர்  நாடாராம்  காண்
      பேர் பெற்று  உலகமெங்கும்  பெருமை  சேர்த்த
                பெரியவராம்  காந்தி மகான்  செட்டியாராம
       கார்  பெற்ற வானுலகம்  சென்ற  பின்னர்
                 காட்டுகின்றார்  அவர் சாதி  தேடித் தேடி



        வரலாறு  இல்லையென்ற  வருத்தம்  நம்மை
                  வாட்டியதோர்  காலம்  போய்  நல்ல வேளை
         தரமாக  அவரெல்லாம்  தமிழரென்றே
                   தான்  கொண்டு  போற்றுகின்ற  பெருமை கொண்டோம்
         வரமாக  வந்துதித்த  அனைவரையும்
                    வழி  மாற்றிச்      சாதி  என்னும்  தீயில்   தள்ளி
         உரமாக்க  நினைக்கின்ற  கொடுமை  தன்னை
                     ஒழித்தே  நாம்  தமிழரென  வாழ்வோம்  நன்கு
                  

பழம் பாடல் புதுக்கவிதை முத்தொள்ளாயிரம்

          சோழன்  என்றால் நேர்மைக்கு  ஒருவன்  என்றும்
                    சொன்ன சொல்லைக் காப்பாற்றும மேலோன் என்றும
          ஆழ  நெடுங் கவிதை களில்  புலவர் எல்லாம்
                     ஆர்ப்பாட்டமாய்ப்  பாடி  அளந்து  விட்டார்
           வேழ  நெடும் படை  கொண்ட  வீரன்  என்றார்
                      வீணர்களை ஒழிப்பதிலே  சூரன்  என்றார்
            பேழையென தன்  நாட்டைக்  காத்து  நின்று
                       பெருமையெல்லாம்  போற்றி  நின்ற  வள்ளல்  என்றார்



            ஏழையென்னை  யாரேனும்  நினைத்தாரா  பார்
                        எனக்குள்ள  குறைகளினைக்  கேட்டாரா   பார்
            பேழை  தன்னை  இடைநடுவில்  கொண்ட பெண்ணே
                        பேசி நிற்பார்  தன்னிடத்தில்  சொல்வாயா  நீ
            வாழையடி  வாழையென  சோழ  நாட்டில்
                         வரி  என்றல்  ஆறில்  ஒரு பங்கு தானே
             கோழையைப்  போல்  என்னுடைய  நெஞ்சும்  நாணும்
                         கொண்டிருந்த  நலன்  எல்லாம்  பறித்துக்  கொண்டான்


              பீழையிதைச்  செய்து  என்னை அலைக்கழிக்கும
                          பிரியமில்லாப்   பெரியவனா சோழ  மன்னன்
              நாளை  வரும்  வரலாற்றில்  இவனை  யாரும்
                          நல்லவன்  என்றே  உரைத்தால்  நீதியா மோ
              வாளை  மீனைப்  போன்ற  கண்ணாள் வடிவழகாள்
                          வாடி நின்று  நீதி கேட்டாள்  தோழியிடம்
               காளையந்தச்  சோழ  மன்னன்  நெறி தவறி
                           கன்னியிடம்  பறித்ததெல்லாம்  தருவானோதான்


                                          முத்தொள்ளாயிரம்

                   என் நெஞ்சும்  நாணும்  நலனும்  இவையெல்லாம்
                    மன்னன்  புனல்  நாடன் வெளவினான்=மின்னே
                    அரவகல்  அல்குலாய்  ஆறில்  ஒன்றன்றோ
                     புரவலர்  கொள்ளும்  பொருள்
                         

Wednesday, May 14, 2008

நபி பெருமான் தந்த வழி

         ஹிரா மலைப்  பொதும்பரிலே  நபி பெருமான்
                     இருக்கின்றார்  நண்பருடன் அவரைக் கொல்ல
         உறாத ஒர் கூட்டத்தார்   படைகளோடு
                      உயரேயே  வருகின்றார்  நண்பர் சொன்னார்
         தராதரம்  இல்லாதார்  கூட்டமாகத்
                       தனியாக  இருக்கின்றோம் நாமே என்றார்
         வராதொன்றும்   இறையென்றும்  நம்மோடுள்ளார்
                       வாடாதீர்  என்று சொன்னார்  வந்தார்  சென்றார


          இறையென்றும்  நம்மோடே  இருப்பதனை
                         என்றைக்கும்   மறவாது  வாழ்தல்  வேண்டும்
          சிறையாக  மனத்துக்குள்  சிந்தனைகள்
                          சேர்ப்பதென்றும்  துன்பங்கள்  தேடித் தரும்
          மறைத்  தூதர்  சொன்னதனை  மனத்தில்  கொள்வீர்
                           ம்லையினிலே சிலந்தி வலை தோன்றக் காண்பீர்
          அரை குறையாய்த்  தொழுவதனைக் கைக் கொள்ளாதீர
                            அவனறியா  தெது  உண்டு  அவனியிலே
                            


         

பழம் பாடல் புதுக் கவிதை கலிங்கத்துப் பரணி

         போகக் களம்  விட்டுப்  போர்க்களம்தான்
                 போகையிலே சொல்லி விட்டுச் சென்ற காளை
          ஆகச் சில  நாளில்  வநதே சேர்வான என்று
                  ஆர்வமுடன்  காத்திருந்தாள்  ஆசைப் பெண்ணாள்
          தாகம்  மிகக் கொண்டாள்  தழுவலுக்காய்
                   தடுமாறித் துடிக்கின்றாள் விழிகள் ஏங்க
          நாகப் படம் போன்ற பெண்ணழகோ
                   நாள்ப் பலவாய்  உறக்கத்தை  கெடுத்ததங்கு


          வருவது  போல்  எண்ணத்தில்  ஒடியங்கு
                   வாயிற் க்கதவில்  இட்ட  தாழ் திறந்தாள்
           வரவில்லை என்றவுடன் மனம்  தளர்ந்து
                    வாட்டமுடன்  தாழினையே இட்டாள்  மீண்டும்
            ஒரு முறையா  இரு முறையா  பல முறைதான்
                     ஒடி ஒடித் திறந்தாளாம்  மூடினாளாம்
            திருகுகின்ற குமிழதுவும்  தேய்ந்த  சேதி
                      தென் தமிழான்  ஜெயங் கொண்டான்  சொல்லுகின்றான்

                                               செய்யுள்

                      வருவார்  கொழுநர்  எனத் திறந்தும்
                       வாரார்  கொழுநர்  என அடைத்தும்
                       திருகும்  குடுமி  விடியளவும்
                       தேயும்  கபாடம்  திறமினோ

Tuesday, May 13, 2008

பழம் பாடல் புதுக் கவிதை கலிங்கத்துப் பரணி

     விழியிரண்டு் தரும்  வேதனையும்
              விரும்பி  மீண்டும் தரும் ஈதலுமே
     அழிவில் கொண்டு நமை  ஆழ்த்துவதும்
              அதிலிருந்து  நமை  மீட்பதுமாய்
      பழிகள்  செய்தழுதல்  பார்ப்பதுமாய்
               பார்த்து  நன்கு நமைச் சேர்ப்பதுமாய்
      பொழியும் அன்பு செய்து பூப்பதுமாய்
               பூத்தது போல் நமை ஒய்த்ததுமாய


      கழிவிரக்கம்  கொண்டு  வாழ  வைக்கும்
               கண்ணிரண்டும்  கொடு நஞ்செனவே
      பழியைச் சொல்லுதற்கு வாய் திறந்தால்
                பார்க்கும்  பார்வையது  அமுதெனவே
      சுழியக் கடைந்தெடுத்த  பாற் கடலில்
                சுற்றி வந்த விடம் அமுதமென
      விழியிரண்டும் இங்கு பாற்கடலாய
                வினைகள் செய்வதிலே  நாம் இருந்தோம்

      தொழிலில்  சிறந்த இந்த விழிகள்  தரும்
                 தொல்லை இன்பமது கொண்டிருந்தோம்
      அழித்தல் செய்தது  போல்  காத்தல் செய்யும்
                  அவ்விரண்டு  விழி அன்பு கொண்டோம்
      கொழித்த மன்மதனின்  மலர்க் கணை போல்
                  கொல்ல வந்த விழி  நோயாகும்
       அழித்து மீண்டும் ஒரு பார்வையினால்
                   அரவணைக்க வந்த  தாயாகும


                                        செய்யுள்

            கடலில் விடமென அமு(து) எனமதனவேள் 
            கருதி வழிபடு  படையொடு கருதுவார்
            உடலின் உயிரையும் உணர்வையும் நடுவு போய்
            உருவும் மதர் விழி உடையவர் திறமினோ   
  

வாழ்வோம்

       உன்னைப் போல்  பிறரையுமே  நேசி  என்ற
                ஒரு  வார்த்தை நல்  வார்த்தை மனதுக்குள்ளே
       மின்னலென வெட்டியது மழையும் கொட்டி
                மேன்மையுறச் செய்ததிந்த  மானிடத்தை
       தன்னை  முதல்  நேசிக்கக் கற்றுக் கொண்டால்
                 தரணியெல்லாம்  உறவாக்கிக்  கொள்வாரன்றோ
       அண்ணல்  அவர் வார்த்தையினைக் கொள்ளாரன்றோ
                 அன்றடித்தார் ஏசுவினைச் சிலுவை தன்னில்


       இன்னும்  அந்தச் சிலுவையினை  விட்டாரில்லை
                  எடுத்தெங்கும்  அலைகின்றார்  கைகளோடு
       தன்னுணர்வு  அற்றாராய் மனிதம் விட்டு
                   தடுமாறித் திரிகின்றார்  உலகமெங்கும்
       அன்னவரைக் கூட  நாம்  மன்னித்தேதான்
                   அரவணைக்க வேண்டும்  என்று அவரே  சொன்னார்
       மன்னவரின்  வழியினிலே  அன்பே செய்து
                    மரணமில்லாப் பெரு  வாழ்வு  வாழ்வோம்  என்றும்

Monday, May 12, 2008

பழம் பாடல் புதுக்கவிதை ஆண்டாள்

         கண்ணனை  எண்ணி  எண்ணிக்  களித்தலுக்  காளேயாகி
                     எண்ணிய  எண்ணம தன்னால்  இளைத்தங்கு  மயக்கமாகி
         புண்ணியம் செய்த ஆண்டாள்  பூவுடல்  தளர்தல்  கண்டு
                      கன்னியர்  எல்லாம்  கூடிக் களி மயில்த் தோகை கொண்டு
         பொன்னுடல்  துன்பம்  தீரப்  பூப்போல  வீசி  நின்றார்
                       என்ன  நீர்  செய்தீர்  அய்யோ இதனாலா மயக்கம்  தீரும்
         மன்னவன் இடுப்பின்  பட்டில்  மாலவன்  வாடை  உண்டு
                        அன்னவன்  இடுப்பின் பட்டை  அவிழ்த்திங்கு வீசுவீரே


         பெண்ணாளின்  உள்ளம்  காணாப் பெருந்தகையாளன்   தன்னால்
                         கண்ணாளா   என றழைத்தும் காணாமல் மயக்கமானேன்
          நன்னாரி  வேரைக் கொண்டு  நல்லதோர்  விசிறி  செய்து
                         என்னதான்  வீசினாலும் எப்படி மயக்கம்  தீரும்
          பெண்ணாரே  அவன் இடுப்பில்  பேணலால்ச் சேர்ந்த பட்டு
                         தன்னாலே வீசினால்தான்  தளிர்க் கொடி நானும்  வாழ்வேன்
          என்றாளே  ஆண்டாள்  அந்த  ஏக்கத்தைப்  பாட்டும்  ஆக்கித்
                         தந்தாள் காண்  படித்துப் பாரும் தமிழாளின் இனிமை  தன்னை


                                                ஆண்டாள்

         கண்ணன்  என்னும் பெருந்தெய்வம்  காட்சி பழகிக் கிடப்பேனை
         புண்ணிற் புளிப் பெய்தாற் போல  புறம்  நின்றழகு பேசாமே
         பெண்ணின்  வருத்தம்  அறியாத    பெம்மான்  அரையின் பீதக
         வண்ண  ஆடை கொண்டென்னை  வாட்ம்  தணிய வீசீரே

செத்தே போனார்

      ஏழைகட்கும்  நல்லவர்க்கும்  உண்மையாக
                எப்போது  வாழ்ந்தாலும்  இன்றும்  உள்ளார்
      கோழையென தன்  குடும்பம் தன்னைக் காக்க
                கொள்ளைகளை அடித்தாரோ  மறைந்தே போனார்
      வாழையடி  வாழையென  வள்ளுவரும்  
                வழி வந்த  நல்லவரும்  சொல்லிச் சென்றார்
       பேழைகளை நிறைத்தார்கள்  மாறினாரா
                 பெருஞ் செல்வர்  என்றாகிச் செத்தே  போனார

Sunday, May 11, 2008

விழுந்து வணங்குகின்றேன்

      வெளி நாட்டில்  வாழுகின்ற  தமிழினத்தீர்
                 விழுந்தே  நான்  வணங்குகின்றேன்  உங்கள்  காலில்
       தெளிவாக  வீட்டினிலே  குழந்தைகட்கு
                  தீந்தமிழைக்  கற்றே  நீர் தருதல்  வேண்டும்
       களி கொள்ளும்  எமைப் போன்ற  தமிழர்  நெஞ்சம்
                  கை கூப்பி  உம்மையுமே தொழுவோம் நாங்கள்
       அளிப்பீர்  இப் பெரு வரத்தை  பிள்ளைகட்கு
                   அன்னை தமிழ் உமை  வாழ்த்தி  அருகில்  நிற்பாள்

பழம் பாடல் புதுக் கவிதை ஆண்டாள்

      தழுவாத  மார்பிரண்டு  எனக்கே  இங்கு
               தந்ததிலே நியாயம்  என்ன சொல்லு  கண்ணா
      களவாடிச்செல்லுதற்கு மனத்தை  மட்டும்
                கணக்கிட்டுக் கொண்டு  சென்றாய்  நீதியா சொல்
      அளவில்லாத் துன்பமது  இந்த மார்பால்  
                அடைகின்றேன்  தாங்கவில்லை  என்ன செய்ய
      பளுவாகித்  துடிக்கின்ற இந்த  மார்பைப்
                 பறித்தெறிவேன்  உன்  மார்பில்  வா  வா  நீயும
                                               
                                            ஆண்டாள்

     உள்ளே  உருகி  நைவேனை  உளளோ  இலளோ  என்னாதக்
     கொள்ளைக் கொள்ளிக் குறும்பனைக் கோவர்த்தனனைக் கண்டக்கால்
     கொள்ளும் பயனொன்றில்லாத்  கொங்கை தன்னைக் கிழங்கோடு
     அள்ளிப்  பறித்திட்  டவன்  மார்பில்  எறிந்தென்  அழலைத் தீர்வேனே

                                 

பழம் பாடல் புதுக்கவிதை

    

      நெற்றியிலே  வியர்வை  யது   நீராக  ஒடி விழ
                நெய்தல்  முத்து மாலையது முலைகளுடன் சேர்ந்து பட
       கற்றையெனும்  குழலதுவும்  காடாகி  நிலை குலை ய
                 கையணியாம் வளையல்களோ கல கலவென் றோசையிட
       முற்றும்  என்று சொல்லுதற்கு  முடியாராய்  இருவருமே
                  முற் பிறவிச் சுக நினைவும்  இப்பிறப்பில்  காண்கின்றீர்
        நிற்கின்றீர்  நெஞ்சத்தில்    நினைப்பதெல்லாம்  கலையாக்கி
            நெடு விழியீர  போதும் உந்தம நெடுங் கதவம்  தாள் திறவீர் 



                                                  செய்யுள்

                 கூடும் இளம் பிறையில் குறு வெயர் முத்துருள
                 கொங்கை வடம் புரளச் செங்கழு நீர் அளக
                  காடு குலைந்தலைய கைவலை பூசல் இடக்
                  கலவி விடா மடவீர்  கடை  திறமின் திறமின்

அடிகளார்

      மடங்கள்  என்றால்  பல்லக்கு  கவரி வீச்சு
           மடமைகளைப் போதித்தல்  என்றிருந்த
      தடங்களையே  மாற்றி நின்றார்  எங்கள்  தந்தை
           தமிழுக்கும்  ஏழைக்கும்  தன்னைத் தந்தார்
      குடம்  குடமாய்ப் பால்  கொட்டி ஆண்டவனைக்
           குளிர்விக்க  நினைத்தாரைக் கண்டு  நொந்தார
      திட மனதால்  ஆண்டவர்க்குச் செய்யும்  பூசை
           திசை  தெரியா  ஏழையர்க்கு  உதவல்  என்றார்

      குமரியிலே  புரியாமல்  மதத்தின்  பேரால்
           குத்து வெட்டு கொலை என்றும்னிதம் வீழ
      அமைதியினை நிலை  நாட்ட  அங்கே சென்றார்
            அடிகளவர்  சேவையினால்  மனிதர்  சேர
      இமயம் முதல்  குமரி வரை  இதயம்  தோறும்
             இருக்கின்ற  காந்தி யண்ணல்  தமக்குப் பின்னே
      குமையும்  ரத்தக் களறிக்குள்  ஒருவர்  சென்றார்
             குன்றக்குடித் தந்தையவர்  சிவனின் பிள்ளை


      உமையவளின்  பிள்ளை  குன்றக் குமரனவன்
             உடன் இருக்க  ஞான  வடிவாகி நின்றார
      தமிழவளின்  துணையிருக்க  நல்லோர்  எல்லாம்
             தன் துணையாய்க்  கொண்டவரும் சேவை செய்தார்
      அமிழ வைக்கும்  குடி திரைக் கூத்து  எல்லாம்
             அண்டாமல்  அவ்வூரைக் காத்து நின்றார்
      கமழ  வைக்கும் சங்க காலப் பட்டிமன்றம்
              கருத்திற்காய்  நாடெங்கும் நடத்தி நின்றார்


      மடமையினை  எதிர்த்து நின்ற பெரியார்  தன்னை
              மடத்துக்கு  அழைத்து  வ்ந்தார் அவரும் வந்தார்
      கடமையினை  நனறாக உண்ர்ந்தாராகி
              கனித்தமிழாள்  குறளுக்கு  அவையும்  கண்டார்
      தடமதனில்  செல்லாமல்   மீண்டும்  நாம்தான்
              தடம்  மாறிச் செல்கின்றோம்  தந்தையவர்
      திட மனதைக் கொள்வீரே குன்றக்குடித்
               திருத் தமிழை ஏழையரைப் போற்றுவீரே
      

Saturday, May 10, 2008

சிலைகள்

     சிலைகளினால்  விளைகின்ற  கவலை தன்னைச்
          சிந்திக்க ம்றந்தாரே நாட்டில்    உள்ளோர்
     அலை அலையாய் ஏழைகளே புரியாராகி
          அழுகின்றார்  தொழுகின்றார் அழிகின்றாரே
      வலை யிதனை  கைக்கொண்டு பணம் படைத்தோர்
           வாக்கு்கள்  சேகரிக்க வழிகள்  கண்டார்
      நிலை யிதனைப்  புரிந்திட்ட  நல்லோர்  இந்த
            நிஜம்  சொல்லி  ஏழைகளைக் காக்க வேண்டும்


     வெவ்வேறு  சாதியிலே  பிறந்த  செல்வர்
            விருந்துக்கு  ஒன்றாகச் சேர்வதுண்டு
     அவ்வவர்  தம்  சாதியிலே ஏழைகளை
             அழைப்ப்துண்டோ விருந்துக்கு  இல்லை  அய்யா
     உள்ளவர்கள்  ஒரு  சாதி  ஒன்றுமில்லார்
              உலகெங்கும் ஒரு சாதி உணர்ந்து விட்டால்
     தள்ளி  நின்று  இவர்களையே தனிமையாக்கி
              தாம்  வெல்ல  உழைப்பவர்க்கு வெற்றி உண்டு
          

பழம் பாடல் புதுக்கவிதை கலிங்கத்துப் பரணி

         காதலர்  தோள்கள்  சேர்ந்து களி  கொண்டு  ஆடும்  நேரம்
                            மாமதி  வானில்  தோன்றும் மங்கையோ் கண்டதில்லை
         ஆதலால்  மதிக்குத்  தன்னுள்  அவமானம்  பிடுங்கித் திங்க
                             சோதிக்கச் சமயம்  தேர்ந்து சோதனை செய்ததங்கு
         பாதிக்கப் பட்டாள்  பெண்ணாள் பனி மதிக் கதிர்கள்  பட்டு
                              ஆதிக்க  சக்தியாகி  ஆட்டுது  மதியும்   அங்கே
         வேதனைப் பட்டாள் அங்கே விரிஉயர் முலைகள்  மீதே
                               பாதிப்பைச் செய்யும்  அந்த பனி மதிக் கதிர்கள்  கொண்டு




         சோதனை  நேரும்  நேரம்  சொந்தங்கள்  ஒன்றே  என்றும்
                                ஆதரவாகும்  என்ற  அம்மொழி  உண்மை  கண்டாள்

         வேதனை  தீர்க்க  அங்கு    விரி குழல்  தன்னில்   மங்கை
                                 பேர் தரும் மலர்கள்  சூட்டி பெருமைகள் செய்ததாலும

         சாதனைப்  பூக்கள் தமமைச்  சார்ந்துள்ள  வண்டின்  கூட்டம
                                 தாம் ஒரு பந்தலைப்  போல்  தளிர்க் கொடி மேலே கூடி

         வான் தரும்  மதியின்  துன்ப  வாட்டத்தை  போக்கு தென்றான்
                                  தேன் தரும் கவிதை தந்த  தென் ஜெயங்கொண்டான் தானும


                                                            செய்யுள்
                 களபம்  வண்டல்  இடும   கலச கொங்கைகளில்
                 மதி எழுந்து  கனல் சொரியும் என்று
                 அளக பந்தி மிசை அளிகள்  பந்தர் இடும்
                  அரிவைமீர் கடைகள் திறமினோ
                          ்
                 

அம்மணங்கள்

          அம்மண மாய்  வந்தோமே இரு பாலரும
                    ஆடை  அணி   கொண்டதனை மறைத்தும்  நின்றோம்
          அம்மணத்தைம்னத்திற்குள் கொண்டோம்  நின்றோம்
                     அதை  ம்றைத்து  வாழ்வது போல்  ஆட்டம் கொண்டோம்
           அம்மணங்கள் சேரத்  தான் மண்மும் கொண்டோம
                      அவர் சேர்ந்தார் வந்ததங்கும்  அம்மணங்கள
            அம்மணங்கள்  இறுதியிலே  அம்மணமாய
                       அடுக்கி  வைதத விறகுக்குள்  அடங்குமம்மா
           
                               
             

Friday, May 9, 2008

பழம் பாடல் புதுக்கவிதை கலிங்கத்துப் பரணி

 

          வேல்  விழியாள் தன்னிடத்தில்  விடையும் பெற்று
                    விரைந்து சென்றான்  போர்க்களத்தில்  வேலே கண்டான்
           பால்  மொழியாள்  தன்  பார்வை  வேலால்  பட்ட
                     பாடங்கள்  தனையெல்லாம்  நினைந்து  நின்றான்
           சேல் அகட்டி  அதன்  வழியாய்  தன்னை  நெஞ்சில்
                     சேர்த்தெடுத்து அணைத்தாளின்  எண்ணம் கொண்டான்
            கோல்  மன்னன்  வெற்றி கொண்டான் விரைந்து  அந்தக்
                      கோல மயில் தனைச் சே ர ஒடி  வந்தான்


            வாசலிலே  நின்றிருந்தாள்  வடிவின்  மிக்காள்
                       வா என்று கேட்காமல்  இதழைச் சேர்த்தாள்
             பூசலிலே இருப்பாளோ  என்ற காளை
                        பூரித்து மனம்  மகிழ்ந்து  தன்னைத் தந்தான்
             ஊசலென  ஆடியவள்   ஆடையெல்லாம்
                        உரித்தவனை ப்  பார்க்கின்றாள் கொஞ்சம் கூட
             கூசாமல்  தன்னாடை களைந்து  நின்றாள்
                        கொங்கை கொண்டு  அவன்  மார்பில்  ஒத்துகின்றாள்


             வேல் கொண்ட  புண்ணோடு  வ்ந்தான்  தன்னின்
                         வேதனைகள்  தீர்ப்பதற்காய்   அன்பின்  மிக்காள்
              பால்  கொள்ளப் போகுமிரு  மார்பகத்தால்
                         பக்குவமாய்  ஒத்துகின்றாள் புண்கள்  தன்னில்
              வாய்  வழியே  அமுதமதும்  ஊட்டுகின்றாள்
                         வலி ஒழித்துச் சுகம் அவனும் காண்பதற்காய்
              பால்  மொழியாள்  மருத்துவத்தை பரணி தன்னில்
                          பாடுகின்றான் ஜெயங்கொண்டப்  பாவி மன்னன்

                                           செய்யுள்

                    தங்கு கண் வேல் செய்த புண்களைத
                    தட முலை வேது கொண்டு ஒற்றியும்
                    செங்கனி வாய் அமுது ஊட்டுவீர்
                    செம்பொன்  நெடுங்கடை திறமினோ்

வாரியார் சுவாமிகள்

          மயிலூர்தி  தனில்  வந்து  முருகன்  என்னை
                     மணம்  சேர  அழைத்திடுவான் என்று  சொல்வார்
          வய்லூரில்  வந்துதித்த   வாரியார்தான்
                     வானூர்தி தனில்  மேலே மரணம்  கண்டார்
          உயிரான  தமிழமுதை  உலகமெல்லாம்
                     ஊட்டி நின்ற  ந்மைப் பெற்ற தாயேயானார்
         அயராது உழைத்து நின்ற அன்பர்க்கன்பர்
                     அவர் விருப்ப்ம் போல்  மரணம்  வந்த தம்மா


         போகாத  ஊரில்லை  தமிழை  என்றும்
                     பொழியாத   நாளில்லை  அவரைக் கண்டால்
         ஆகாத  பேர் வழிகள்  மனத்தில்  கூட
                     ஆநந்தக் கிருபை  தரும்  அன்பின் செம்மல்
         சாகாம்ல்  வாழ்வதற்குப் பிறந்தார்  தம்மின
                      சரித்திரங்கள்  சொல்லி நின்ற மாமனிதர்
         ஆகா  அப்பட்டியலில்  அவரும் சேர்ந்தார்
                      அன்னை தமிழ்  பெற்றெடுத்த  வாரியாரே
                     

Thursday, May 8, 2008

பழம் பாடல் புதுக் கவிதை கலிங்கத்துப் பரணி

          இடம்  மாறிப்  போகாத  காதலோடு
                    இதயத்தால்  இணைந்திட்ட இருவர்  இங்கு
          தடம்  மாறிப்  போகாத  தங்கள்  காதல்
                     தன்மையினால்  பெருமை கொண்டு வாழ்கின்றாராம்
          நிறம்  மாறிப் போகிறதாம்  அவர்கள்  வாழ்வில்
                     நெகிழ்வாகச்  சொல்லுகின்றான்  கடை  திறப்பில்
          புறம் பாடும்  முன்னாலே  ஜெயஙகொண்டானும்
                     போற்றி  நிற்கும  அகம்  காண்பீர்  காண்பீர்  நீவீர்

          மாலையிலே  துவங்கியதாம்  தழுவல்  அந்த
                      மங்கை ந்ல்லாள் இதழ்  இடையை இணைத்திட்டாளாம்
          காலை வரும்  என்கின்ற் நினைவே  இன்றி
                      களியாட்டம்  தொடர்கிறதாம்  மேலும்  மேலும்
          ஆலையிட்ட  கரும்பாக  இருவருமே
                      அடுத்தவரின் உடல் பிழிந்தே ம்கிழ்கின்றாராம்
          காலை வந்து தொலைத்ததுவாம் என்ன  செய்ய
                       கனி மொழியின்  தோழியர்கள்  வந்து விட்டார்


          வேளையற்ற வேளையிலே  வந்தார்  என்றே
                       வேதனையில்  தோழியரைக் காண வந்தாள்
           பாளையிதழ்ச்  சிவப்பினையே  காணோம்  என்று
                        பதை பதைத்துப்  போனார்கள்  தோழி மார்கள்
           காளை யென்ன  செய்து வைத்தான்  என்ற போதே
                        கணக்ளிலே சிவப்பினையே கண்டு விட்டார்
           பேழையென்னும்  கண்ணிரண்டின்  வெண்மை தன்னை
                        பேர்த்தங்கு  இதழ்களிலே  தந்திருந்தான்

           இரவெங்கும்  விழித்திருந்தால்  கண்கள  எங்கும்
                         எப்போதும் சிவந்து  விடும  இதுதான்  உண்மை
           பருவத்தின்  இதழென்றும்  பவளம்  என்றே  
                         பார்த்திருந்தோம்  அது வெண்மையானதென்ன
           கரு விழிக்குச் சிவப்பளித்து வெண்மைதன்னை
                         கனி இதழும்  பெற்றதனைக் கண்டு  நின்றார்
           தருவதிலும்  பெறுவதிலும்  நிறங்கள்  மாறித்
                         தடம்  மாறும்  அழகினிலே  மயங்கி நின்றார

                                               செய்யுள்

                வாயிற்  சிவப்பை  விழி    வாங்க
                மலர்க் கண் வெளுப்பை வாய் வாங்கத்
                தோயக் கலவி அமுதளிப்பீர்
                துங்கக் க்பாடம்  திறமினோ

தீந்தமிழ் நாட்டின் பாரதியார்

   




          பூப்பெய்தாப்  பெண்களையே  திருமணத்தில்
                    பொருத்துகின்ற  மடமையினை   நிறுத்தச் சொன்னான்
          காப்பென்று  வந்தவனோ  துணையாயின்றி
                    கயவாளி  ஆனாலோ  ஒதுக்கச் சொன்னான்
          போப்போவென்றவன் தன்னைத் தூரத் தள்ளி
                    பொருந்து நல்ல  மனத்தானைச்  சேரச் சொன்னான்
          தாய்க்கோலம்  வேண்டாமல்   தலைமை கொள்ளத்
                    தான்  விரும்பும்  பெண்களையே  போற்றச் சொன்னான்


         இசுலாமே  உலகத்தின்  பெரிய  மார்க்கம்
                    என்றாகும்  என்பதனைத் தெளியச் சொன்னான்
        வசு தேவக் கண்ணனைப் பல்  வடிவில்  தேர்ந்து
                    வாழ்வியலின் வழியாகச் சேர்த்துச் சொன்னாண்
        தசை ரத்தம்  கேட்கின்ற  ஏழைத் தெய்வம்
                    தன்  தெய்வம்  என்றவனும்  ஆடி நின்றான்
        பசையுள்ள  பணக்காரர்  தம்மை விட்டு
                    பாடு படும்  பாட்டாளி  பக்கம்  நின்றான்


       எட்டு  மொழி  முறையாகக் கற்றுத்  தேர்ந்தான்
                    எம்மொழிதான்  செம்மொழி  என்றெழுந்து நின்றான்
       கட்டுரைகள்  கவிதை  என்று  பல மொழிந்தான்
                     கனித்தமிழே  இனிய  மொழி  என்ற்றைந்தான்
      சிட்டுக்   குருவியென்றே   சிறகடித்தான
                     செந்தமிழர்  நாடென்றே  தேன்  வடித்தான்
       மட்டற்ற  விரிவானின்  வெளியில்  எங்கும்
                      மாக் கவிஞன்  பாரதியே  நின்றொளிர்ந்தான்

Wednesday, May 7, 2008

பழம் பாடல் புதுக் கவிதை கலிங்கத்துப் பரணி

     மெல்ல  நடந்தான்  காளையவன்
          மேனி சிலிர்த்தாள்  மங்கையவள்
     அள்ளி அணைத்தான்  காளையவன்
          அடங்க மறுத்தாள்  பெண்ணவளும்
     துள்ளி விழுந்தார்  கட்டிலிலே
          தொடர்ந்த  த்வர் தம் ஆட்டங்களே
     பள்ளி  அறையினில்  இருவருமே
          படித்தனர்  பழம்  புதுப் பாடங்களே


     கள்ளியின் விழிகளில்  காளையவன்
          காளையின்  விழிகளில்  கள்ளி  யவள்
     அள்ளி  அணைக்கையில்  விழிகளெல்லாம்
          அங்கே  யிழந்தன  பார்வைகளே
     தள்ளியே விடுதல் போல்  நடிக்கின்றாள்
          தழுவிடும் காளையோ  துடிக்கின்றான்
     கள்ளியின்  உண்ர்வினைப புரிந்த  பின்னர்
          கட்டித தழுவியே  பாடம் சொன்னான்


     கூடி மகிழ்ந்தனர்  இருவருமே
          குளித்தே மகிழ்ந்தனர்  வேர்வையிலே
     ஆடிக் களித்தவன்  தூங்கி விட்டான்
          அவளோ சேலையைத் தேடுகின்றாள்
     நாடிக் களித்திட்ட நற்  களியில்
          நங்கை தன்னை இழந்த்தனால்
     ஊடி வருகின்ற்  நிலாவொளியை
          உடையென்றெடுத்து உடுத்துகின்றாள்


     பாடு பொருளாய் இதை வைத்து
          பாடி நின்றான் ஜெயங்கொண்டான்
     கூடி அவனைத் தினந்தோறும்
          கூட்டி வருவேன்  உம்மிடத்தில்
     ஆடிப் பாடிப்   போற்றுங்கள்
          அன்னை தமிழாள்  தன்னழகை
     ஒடி  ஒடிக் க்டை திறப்பால்
          உண்மைக் காத்ல்  போற்றுங்கள்

                                  செய்யுள்

     கலவிக் களியின்  மயக்கத்தால்
     கலை போயகலக் கலை மதியின்
     நிலவைத் துகிலென்றெடுத் துடுப்பீர்
     நீள்  பொற்  கபாடம்  திறமினோ
         

வள்ளுவரே காக்க வேண்டும்

     குடியென்னும்  பேரரக்கன்  ஏழையர்தம்
          குடும்பத்தை  வேரறுத்தல்  ஒன்றே செய்வான்
     அடிக்கு மேல்  அடி தந்து  அவர்கள்  தம்மை
          அழ வைத்தும் தொழ வைத்தும் அழித்தொழிப்பான்
     வடிவாக  வள்ளுவர்க்குச் சிலைகள்  வைப்பார் அவர்
          வழி மட்டும் ஒரு  நாளும்  நினைவில்  வையார்
     அடி நாதமாக  அவர்  வழியைக்  கொண்டால
          அதன் பின்னர் தமி  ழருக்கு வீழ்ச்சியில்லை



     பெற்ற மகன் தவறுகளைப் பொறுத்துக் கொள்ளும
          பேரருளின்  அன்னையவர்  முகம் சுளித்தல்
     கற்றவரும்  பெரியவரும்  விலகிச் செல்லல்
          கண்ணியத்தார்  எண்ணி எண்ணிக்  கவலை  கொள்ளல
     மற்றவரோ  சொல்லுதற்கு   அஞ்சி நிற்ற்ல் 
          மனைவி மக்கள் அன்றாடம் உயிர்  துறத்தல்
     சொற்றமிழில்  வள்ளுவரும்  சொல்லி வைத்தார்
          சோகங்கள்  தீர்ப்பதற்கு  யார்  நினைந்தார்


     ஏழையர்தாம்  அழிகின்றார்  பணம்  படைத்தார்
          ஏற்றங்கள்  பெறுகின்றார்  குடியின் மூலம்
     கோழைகள்  போல்  வணிகங்கள்  கொள்வதற்கும்
          கொள்ளை  லாபம்  அடிப்பதற்கும் குடியைக் கொண்டே
     பேழைகளை நிரப்புதற்கும்  வழிகள்  கண்டு
          பெரும் பெரிய்  விடுதிகளில்  கூட்டம்  சேர்த்து
     வாழையடி  வாழையென  இந்த  நாட்டின்
          வளம் ஒழித்து  குலம் கெடுத்து  வெல்லுகின்றார்

     வாக்களிக்கும்  கூட்ட்மென  ஏழையரை  
          வகைப் படுத்தி   வைத்து உள்ளார அவர்கள்  தம்மைப்
     போக்கொழிந்த  நிலையினிலே  வைத்தால் தானே
          போர்க்குணங்கள்  இல்லாத அடிமையாவார்
     யார்க்கு  வரும்  இவ்வினிய  ந்ல்ல  நோக்கு
          எம்  தமிழர்  திரு நாட்டில்  அன்றி  வேறு
     பார்க்கின்றோம்  சொல்கின்றோம்  அழுதழுது
          பதைக்கின்றோம்  வள்ளுவரே  காக்க  வேண்டும் 
     
          


     

Tuesday, May 6, 2008

பழம் பாடல் புதுக் கவிதை கலிங்கத்துப் பரணி

     காத்திருந்து  காத்திருந்து  கண்ணிரண்டும்   ஒய்ந்த மகள்
           பார்த்திருந்த  பாவி மகன்  பக்கத்திலே வ்ந்தமர்ந்தான்
     சேர்த்தணைக்கும்  ஆசை யுண்டு  சிற்றிடையாள கோபமதால்
           பார்த்த படி்  காத்திருந்தான் பயமதனால்  வேர்த்திருந்தான்
     ஆர்த்தசையும்  மார்பிரண்டும்  அருகினிலே  இருந்தும்  அவைக்
           கோர்த்தணைக்க முடியாமல்  குழம்பி  நின்றான் தங்க மகன்
     வார்த்தைகளால்  ஏதேனும்  வம்பு  வரக் கூடும்  என்றே
           வாய்  திறக்க மாட்டாமல்  வாடி அவள்  முகம்  பார்த்தான்

     பார்த்தபடி  அமர்ந்திருக்கும் பாவமதைப்  பார்த்த  பெண்ணாள்
           சேர்த்தணைக்க  முடியாமல்  சிந்தனையில்  சிரித்திருந்தாள்
     வார்த்தையினைக் காக்காம்ல்  தாமதமாய்  வ்ந்ததனால்
           வடிவ்ழகைக் காட்டாமல படீரென்று  எழுந்து சென்றாள்
     கோர்த்தவளின்  முந்தானைத் தலைப்பினையே  பிடித்திழுத்தான
          வேர்த்தவளோ  விடு  விடென்று  வேகத்தைக் காட்டுகின்றாள்
     பார்த்தவனோ மேலும் மேலும்  பற்றியே  இழுக்கின்றான்
           ஆர்த்தவளோ  விடு விடென்று அதையேதான்  சொல்லுகின்றாள்

     போய்த் தொலையவில்லை  அவள்  போவதற்கும்  மனதில்லை
           காய்த்த  ம்னம்  இல்லாத  கனி  மனத்தாள்  நின்றிருந்தாள்
     வாய்த்த  நல்ல  வாய்ப்பதனில்  சேலை தொட்டுப் பார்த்ததையும்
           வடிவழகாள்  விடச்  சொல்லி  வாயதனால்   சொன்னதையும்
    பேர்த்தெடுத்துப்  பார்க்கின்றான்  பிடி என்று சொல்வதைத்தான்
           வார்த்தை  மாற்றி விடு  என்று  வாயழகில்  காட்டுகின்றாள்
    ஆர்த்து  நின்ற்  அன்பு மகன அகராதி கண்டு   கொண்டான்
           வார்த்தை  விடு  என்று  சொன்னால்  வா என்னைப்  பிடி  என்று

                                                          செய்யுள்

     விடுமினெங்கள்  துகில்  விடுமினென்று  முனி
     வெகுளி  மென்குதலைத் துகிலினைப்
     பிடிமினென்ற  பொருள்  விளைய்  நின்றருள்  செய்
     பெடை நலீர் கடைகள்  திறமினோ
     

வேணும் இலவசம் இன்னொண்ணு

     ஆணுறை  இங்கே  இலவசம்
           அடுப்பும்  கேஸூம்  இலவசம்
     காணும்  பொட்டி இலவசம்
           கலர் கல்ராத்தான்  இலவசம
     பேணும் கல்வி  அது மட்டும்
           பெருந் தனவந்தர்  கை வசம்
     நாண்ம் வீழ்த்தும் மதுக் கடைகள
           நமது  அரசின்  கை வசம

     தேனும்  பாலும்  வேண்டாமே
           தேக சுகங்கள்  வேண்டாமே
     நாணம்  வெடகம்  வேண்டாமே
           நாங்க கேட்பது இது ஒண்ணே
     வேணும் இலவசச் சுடுகாடு
           விரைவில்  வ்ழங்கணும்  அதை நாடு
     ஆணும் பெண்ணும்  சாகையிலே
           அக மகிழ்வோடே போகோணும்

   
     

Monday, May 5, 2008

பழம் பாடல் புதுக் கவிதை கலிங்கத்துப் பரணி

     புகைப்படத்தில்  தகடுகளில் பிரிந்து போகும்
          பொன்னான  காதலனைப்  பதிந்து  கொண்டு
    வகைப் படுத்திப் பார்க்கின்றீர் நாள்  குறித்து
          வந்த செய்தி  நடந்த செய்தி  சேர்த்து வைப்பீர்
    திகைப்படைந்து  போவீர்  நீர்  அந்த்க் காலச்
          செந்தமிழர் பெண்ணார்  தம் திறனறிந்தால்
    தொகைப் படுத்திச் சொல்லுகின்றான் ஜெயங்கொண்டானும்
          தோகையவள் பெரும் பேற்றைச் செய்யுளாக


    படையெடுத்துப் போகின்றோம்  என்று சொல்ல
          பாவையிடம்  வந்து நின்றான்  இனிய சொல்லான்
    இடையெடுத்துத் தந்த  இரு போர் முனையில்
          இடுகின்றான்  நகங்களினால்  குறிகள் எங்கும்
    தடையின்றி  இரு  மார்பைத் தந்து  தந்து
          தகவலினைப்  பதிப்பதற்கு வழிகள் தந்தாள்
    விடை கொடுத்தாள் அவன்  சென்றான் மங்கை நல்லாள்
          விரகமதைத் தீர்க்க  அதை  வழியாய்க் கொண்டாள்


      வருவதற்கு  பல நாட்கள்  ஆகும்  என்றே
           வந்து சிலர் சேதி  சொல்லி நிற்கும் போதும்
     தருகின்ற அச்செய்தி   ம்ங்கை தானும்
           தடுமாற வழி வகுக்கும்  என நினைப்பார்
     சிறு இடையாள்  வருத்தமெதும்  கொள்ள மாட்டாள்
           சேமித்து வைத்த நகக்குறிகள் தன்னால்
     மறுபுறத்தில்  தனியாக  ஆடையின்றி
           மார்பகத்துக் குறிகளிலே மனம் கொள்வாளாம

     செல்வமில்லார் செல்வத்தைக் கண்டாற் போல
            சிறந்த  அந்தக் குறிகளிலே  செல்வம் காண்பாள்
     வல்லவனின்  நகங்கள்  இட்ட குறிகளெல்லாம் அவன்
           வடிவழகைக் கண்டு  கண்டு ஆடுவாளாம்
    சொல்லுகின்றான்  ஜெயங்கொண்டான் தேடிக் காண்பீர்
           சுகம்  சுகம்தான்  பரணியிலே  கடை திறப்பில்
    உள்ளுகின்றேன்  தமிழமுதை  உள்ளி உள்ளி
          உயிர்  கொண்டு  வாழ்கின்றேன்  உவகையோடு

     முலை மீது  கொழுநர் கை நக மேவு குறியை
     முன் செல்வம்  இல்லாத  அவர் பெற்ற பொருள் போல்
     கலை  நீவி  யாரேனும்  இல்லா இடத்தே
     கண்ணுற்று நெஞ்ச்ம்  களிப்பீர் கள் திறமின்

வண்டமிழின் தன் மகனார்

     தமிழனுக்குப்  பொறந்தவந் தான் இங்கிலீஷு
          தட தடன்னு  பேசுனானா  அசந்தே போனேன்
     அமிழ்தம்  நம்ம  தமிழுன்னு  நாமக்கல்லார்
          அன்னிக்குச்  சொன்னதெல்லாம்  நெனச்சுக் கிட்டேன்
     உமிழ் நீரில்  பால்  சேர்த்து  அவங்க ஆத்தா
           ஊட்டையிலே தமிழுந்தான்  ஊட்டிருப்பா
     கமழ்கின்ற தமிழ் விட்டு  இங்கிலீஷிலே
           கதைச்சாத்தான்  பெருமையின்னு இவன் நெனைக்கான்

     தெலுங்கினிலே  பேசிக்கிட்டு  இருவர்  போனா
           தெளிவா நான்  தெரிஞ்சிடுவேன்  தெலுங்கருன்னு
     துளுவினிலே பேசிக்கிட்டு இருவர் போனா
           சுளுவா நான்  தெரிஞ்சுக்குவேன் துளுவருன்னு
     கொழு கொழுன்னு மலையாளம்  பேசிப் போனா
           கொண்டிடுவேன்  மலையாள நண்பர்  என்று
     வழு வழுன்னு  ஆங்கிலத்தில் பேசி நின்றால்
           வண்டமிழின் தன் மகனார்  என்றுணர்வேன்

Sunday, May 4, 2008

சொரணையில்லை

     திங்காத பொருளையெல்லாம்  திங்கதுக்குத்தான்  
         தெரிஞ்சுக்கிட்டான் இந்தியங்க  அதனாலேதான்
    மங்காத்தா  சூதைப் போல்  வெலவாசிதான்
          மளமளன்னு  ஏறுதுன்னு  மாமா சொன்னார்
    எங்காத்தா  எவன்  அந்த மாமான னாக்க
          எக்குத்தப்பா  கேக்காளே  என்ன சொல்ல  
    பொங்காத்தா   எவன்  சொன்னா  ஒனக்கு என்னா
          பொறுப்பான எவன்  கேக்கப் போறான்  இங்கே

    அணுசக்தி  தந்து  நம்மை  அமுக்கணும்ன்னு
           ஆடுறானே அமெரிக்க  வெள்ளைக்காரன
    தனைச்சுத்தி  யாரேனும்  வாழுறதைத்
           தாங்காமத் துடிக்கின்ற் கொள்ளைக்காரன
    நெனச்சிட்டான்  நாம  நல்ல  சாப்பாட்டையே
           நேத்து வர  சாப்பிட்டதேயில்லை யின்னு
    கொணக்கேடு  புஷ் ஷூ  மாமா  ஒளறுதான தான்
            கூப்பிட்டுக் கேக்க  ஒரு  நாதியில்ல


    அம்மண மா  காட்டுக்குள்  அவங் கூட்டம்  திரிஞச
           அப்பவே உணவை  நாம்  மருந்தாகக்  கொண்டோம்
    எம்மண்த்தை  உணவினிலே  சேர்த்தே  நாம்  உண்டால்
           எவ்வுடற்கும்  நன்மை  செய்யும்  என்றே  அறிந்தோம்
    ந்ம்மினத்தார்  ஆடை கட்டி அரசு  செய்த காலம்
           நாடின்றிக் காட்டினில அலஞ்சவங் களெல்லாம்
    நம்மப் பத்தி  வாய்  தொறக்காம்  என்ன  செய்ய  ஆத்தா
           நாம  சொல்லி  எந்தப்பய  கேட்டு விடப்  போறான்
        

    ஆவியிலே வேக வ்ச்ச  உணவு   தன்னை  நீயும்
           அப்ப ச்ரி  இப்ப  சரி  எப்பவுமே   உண்ணு
    தாவி நல்ல  குதிக்கிறாற் போல்  உன் உடம்பு  இருக்கும்
           தடுமாற்றம்  இருக்காது  என்று  அன்றே  சொன்னார்
    மேவி அதைக் கடைப் பிடித்தால்  நோய்  நொடிகள்  இல்லை
           மென் நடையை  உணவிற்குப்  பின்னால  கொள்ளு
    ஆவி உடல் பிரியும் வரை  அவதிகளே  இல்லை
           அற்புதமாய்  பல  செய்தி  சொல்லி வைத்தார்  முன்னோர்

    யாரு  வீட்டு  உணவெல்லாம்  ஊருக்குள்ள  வந்து
           என்னென்ன  ஆட்டமெல்லாம்  போடுது  பார்  இங்கே
    காரு மேல காரு  கொண்ட  கண்ணியவான்  எல்லாம்
           கால்  மேல  கால்  போட்டுத் திங்கிற்தைப் பாரு
    நீரு  போயி  நீத்தண்ணி  குடிக்கிறதைச் சொன்னா
           நிக்க வச்சு  உமைப் பாத்து  சிரி சிரின்னு  சிரிப்பார்
    சீரு  கெட்ட  நாடாச்சு  அதனாலேதானே
           செவிட்டோடு  அறை  கொடுக்கார்  அமெரிக்க மாமா

    புஷ்ஷு  மாமா  சொல்லியாச்சு   பொத்திக் கிட்டுப்  போடா
           புவனத்துச் ச்ந்தைக்குள்ள நாம புகுந்தாச்சு
    கிஸ்ஸடிக்க  வேணுமுன்னா  புஷ்ஷு  மாமா கிட்ட
          கேட்டுக்கிட்டா நல்லதுன்னு  பிரதமரே சொல்வார
    தஸ்ஸு புஸ்ஸு இங்குலீஷ்  சிதம்பரத்து  அண்ணன்
          சண்டைக்கு வ்ந்திடுவார்  மூடிக்கிட்டு  வாடா
    ப்ஸ்ஸுக்கு  காசு  இல்ல  ஒனக்கு  என்ன  திமிரு
          பக்குவமாய்த் தேர்தலிலே  ஒட்டைப் பாத்துப்  போடு
    

பழம் பாடல் புதுக்கவிதை கலிங்கத்துப் பரணி

   மலை தந்த ம்ழையாலே  விளைந்த  முத்து
          மாலையென  உருக்கொண்டு  மலைகள்  சேர
     சிலையுருவப்  பெண்ணாளின்  சிவந்த  மார்பில
          சேர்ந்த  முத்து மாலையினுக் கிடையே சென்று
     அலை கடலின்  பவளமதும் அவளின் மார்பில
          அணிகலனாய்ச் சேர்த்தானாம்  எவ்வா றென்றால்
     குவியும்  இதழ்  மார்பகத்தில்  குவித்து வைத்து
          கோலமிட்டான்  ப்ற்குறியால்  மார்பகத்தில்


     பதிந்து  விட்ட  பற்களது  சிவந்த  மார்பில்
          பவள  வடம்  போட்டது போல்  அழகு செய்ய
     கனிந்து விட்டாள்  பேரழகி  காதலனின்
          கவிதை  வரி  மார்பினிலே  பவளமாக
     புவியிலிது  போற்  கவிதை  எங்கும்  யாரும்
          புகன்றதுண்டோ  புகன்றீடுவீர்  தமிழினத்தீர்
     கவிதையிது  ஜெயங் கொண்டப்  பெரிய  பாவி
          கலிங்கத்துப்  பரணியிலே  புகன்றதையா


                                                          செய்யுள்

          முத்து  வடம்  சேர்  முகிழ்  முலை மேல்
          முயங்கும்  கொழுநர் ம்ணிச் செவ்வாய்
          வைத்த  பவள வடம்  புனைவீர்
          ம்ணிப் பொற் கபாடம்  திறமினோ
     

தனியாய்த் தெய்வம் வேறே வேண்டாம்

     தந்தையைத்  தாயை  வணங்குதல்  போதும்
          தனியாய்த் தெய்வம்  வணங்குதல்  வேண்டாம்
     முந்தியே நமக்கு  அவ்வை  அன்னை
          முறையாய்ச்  சொன்னாள்  நல் வழி  இதனை
     சந்ததி  தமக்கு  உணர்த்திட  நாமே
          சரியாய்க் கொண்டால்  உலகே வெல்லும்
     வந்தனம்  செய்வீர்  தந்தையைத்  தாயை
          வளமாய்  வாழும் உளமே  தானே
     

Saturday, May 3, 2008

பழம் பாடல் புதுக்கவிதை கலிங்கத்துப் பரணி

     தாமதமாய்   வந்து விட்ட  காளை  கண்டான்
          தளிர்க்  கொடியாள்  உறக்கமதைத் தழுவியதை
     பூம்ணத்து  மேனியினைத் தான்  தழுவி
          புதுக் கதைகள்  பல படித்து மேனியெங்கும்
     நாமணக்க  முத்தமிட்டு  மேலும் மேலும்
          நல்கு  என  அவள்   வேண்ட  மீண்டும் மீண்டும்
     ஆவணமாய்  அழகு மயில்  உடலம்  கொண்டு
         அனைத்தையுமே  பத்திரமாய்  எழுதிப்  பின்னர்

     
     கோமகளும்  உறங்குவதே  வழக்கம்  என்ன
          கோபத்தில்  துயில்  கொண்டாள் என நினைந்தான்
     சாமமிது  இவ்வுறக்கம்  இதனை  நாமும்
          சரியாக்ப்  பயன் படுத்தல்  வேண்டும்  என்றே
     ஆவலினை  நெஞ்சினிலே  கொண்டான் அந்த
            அழகு மயில்  அருகினிலே சென்றான் நின்றான
     தாவி  அவள்  இடையினுக்கு  இடையே  தன்னின்
          தடக்கையைக்  கொண்டு   வைத்தான் விழித்தாளில்லை

     ஆவலதில்  மார பிரண்டும்  விம்மியோங்க
          அழகு மயில்  நடிக்கின்றாள் துயில்வாள் போல
     காவலனோ  வைத்த கையை  எடுக்கவில்லை
          கண்மணியோ நடிக்கின்றாள்  விழிக்கவில்லை
     பாவலனாம்  ஜெயங்கொண்டப்  பாவி மன்னன்
          பாப்புனைந்து  தந்துள்ளான் பரணி தன்னில்
    தாவி  வரும்  செய்யுளதைப்  பின்னால்  தந்தோம்
          தமிழினத்தார்  இப் பெருமை  நமக்கே  சொந்தம்



                                     செய்யுள்

     இத்துயில்  மெய்த்துயில்  என்று  குறித்து இளையோர் அடியிற்
     கைத்தலம்  வைத்த்லும்  பொய்த்துயில்  கூர் நயனக்
     கடை திறவா மடவீர்  கடை திறமின்  திறமின்

அய்யா நாங்களெல்லாம்

     கொய்யாப் பழம் விக்கும் கோபாலு  நான்
          கோரைப் புல் விக்கின்ற  மாயாண்டி  நான்
     அய்யா  நான்  மீனு  விக்கும் மேரியம்மா
          அவதான்ய்யா  கீரை  விக்கும்  காளியம்மா
     கையாலே வண்டி  தள்ளி  தெருத் தெருவாய்
          காய்கறிகள் வித்து வாழும்  கண்ணுத் தாத்தா
     அய்யா  நாங்களெல்லாம்  ஒட்டுப் போட்டோம்
          அதனாலா எங்களையே ஒச்சுப் போட்டே

     மேல்  நாடு  கீழ்  நாடு  எல்லாம்  சுத்தி
          மேலும்  மேலும்  பணம்   சேக்கும்  அய்யாமார
     ஊர்  ஊராக் கடை  திறந்து  எங்க  வாழ்வ
          ஒழிப்பதற்கு  ஏற்பாடு செய்தே  போட்டீர
     கார்  மேல்  போறேரு  ஒமக்கு எங்க
          கவலைகளைச் சொல்லுதற்கு  யார் இருக்கா
     நார்  நாராய்க்  கிழிக்கின்ற  தோழர்  மாரும்
         நாள  வரும்  தேர்தலுன்னு  வாயடைக்கா

     சார்வா  ஒங்க  மோசடியால்  அழியப்  போகும்
         சங்கடத்தில்  என்னிக்கும்  வாழும்  நாங்க
     மோர்  வித்துப் பிழைப்பதற்கும் வழியடச்சு
          மொத்தக் கட  தொறக்க  வ்ழி எல்லாம்  செஞ்சீர்
     தேர்  போல  பிழைப்புமக்கு   ஒடணும்ன்னா
          தெருவோரம்  அச்சாணி  நாங்கதான்யா
      ஊர்  ஊரா  வருவேர்ல்லா  ஒட்டுக் கேட்டு
          ஒத  இருக்கு  அன்னிக்கு  வாரும்  பாப்போம்
     
          

Friday, May 2, 2008

பழம் பாடல் புதுக்கவிதை பரணி

     பழம் பாடல்  கனிப் பாடல்  செயங்கொண்டான்
          பக்குவமாய்  பொற்குவையாய்  தந்த  பாடல்
     உளம்  கொள்வீர்  உவகையிலே  உச்சம் கொள்வீர்
         உண்மையிது  பொய்யில்லை  உணர்வீர்  நீரே


     கிளி வளர்த்தாள்  ஒரு  கிள்ளை  சொன்னதெல்லாம்
          கிண்ணாரம்  கொட்டி உடன் மீண்டும் சொல்லும்
     பழி  வளர்க்கும்  அது  என்று  தெரியாளாகி  
          படுக்கையறைக்குள்ளேயே  வைத்துக் காத்தாள்
     களி  நடக்கும்   வழி நடக்கும்  காதல்   கொள்ளை
          கட்டிலிலே  நடக்கின்ற  நேரமெல்லாம்
     கிளி  இருக்கும்  உள்  அதனை மறந்தாளாகி
          கிறுக்கு  மொழி  பல  உளறி  வளர்த்தாள்  காதல்

     
     அடுத்து  பகல்  விடிந்ததங்கே  தோழி மார்கள்
          ஆற்றுக்கு  நீராட  அழைக்க  வந்தார்
     கெடுத்ததங்கு  கிளி  அவளின்  மானம் தன்னை
          கெக்கலித்துச்  சிரித்து  நின்றார்  தோழிமார்கள்
     அடுக்கடுக்காய்க்  காதலனைக்  கொஞ்சிக் கொஞ்சி
          அவள்  உரைத்த  வார்த்தையெல்லாம்  கிளி  அடுக்க
     படுத்திடவே  தொடங்கி நின்றார  தோழிமார்கள்
          பாவி மகள் வாய்  புதைத்துத் தலை கவிழ்ந்தாள்

 
                  செய்யுள்
     நேயக்  கலவி மயக்கத்தே  
     நிகழ்ந்த மொழியைக் கிளி உரைப்ப
     வாயைப் புதைக்கும்  மட நல்லீர்
     ம்ணிப் பொற் கபாடம்  திறமினொ

கண்ணதாசன்

     பாய்ந்து  வரும்  தமிழழகு  வார்த்தையெல்லாம
          படிப் படியாய்  வரி வடிவம்  கொள்ளும் நேரம்
     தோய்ந்து  விடும்  நம் மனது  துள்ளி  நிற்கும்
          தொடர்ந்து  வரும்  பாடல்களில்  மயக்கம்  கொள்ளும்
     ஆய்ந்தெடுதத  தமிழ்  அங்கே  அழகு  காட்டும்
          அவனால் தான்  முடியும்  என்று  உள்ளம்  சொல்லும்
     காய்தலுக்கும்  உவத்தலுக்கும்  ஆளாய்  நின்ற
          கவிஞன்  அவன்  செட்டி  நாட்டுக்  கண்ணதாசன

     தாய்மையினைப்  பாடி நிற்பான்  தங்க மகன்
          தாய்க் குலமே  அவனுக்குள்  அடக்கமாக
     தூய்மையினைப்  பாடி நின்றால்  அவனுக்குள்ள
          துய்ய  நிற  வெண் மனது தோன்றும் அங்கே
     வாய்மையினைப்  பாடி  நிற்பான்  இடையிடையே
         வழி தவறிச் சென்றதெல்லாம்  நினைவில்  கொள்ள
     ஆய்ந்தன்னை  தமிழ்  அவனைப்  பிள்ளையாக
          அரவணைத்தாள்  அவன்  எங்கள்  கண்ணதாசன்

     போய்  அவனைப்  படித்தி டுவீர்  இளையவரே
          புரியும்  கவி  எழுதும்  வகை  புரியும்  நன்றாய்
     காய்  தெரியும்  கனி தெரியும் கவி தெரியும்
          கனித் தமிழின்  செல்வமெல்லாம் கையில் சேரும்
     வாய் திறந்தால்  கவிதை  எல்லாம்  வடிவம் காட்டும்
          வண்டமிழாள்  தண்டமிழாள்  உம் தமிழாவாள்
     ஆய்ந்துணர்வீர்  இளையவரே  அன்னை தமிழ்
          அவளளித்தாள்  கண்ணதாசப்  பேரான் தன்னை
   
          

     

Thursday, May 1, 2008

பழம் பாடல் புதுக்கவிதை முத்தொள்ளயிரம்

     ஒராண்டாய்ப்  பாண்டியனின்  பழக்கம் அவர்
          உறவு  கொள்ளல்  அன்றாட  வழக்கம்
     சீரான  அவ்வுறவில்  பெண்ணாள்  சொல்லும்
          சி(ற்)ரிப்பான்  செய்தியினைப்  பார்ப்போம்

     படையெடுக்கும்  பாண்டியனைப்  பார்த்த  அன்றே
          பனிமொழியாள் தலை கவிழ்ந்தாள் அவனின் கைகள்
     இடையிழுத்து  அணைக்கையிலே  தனை  இழந்தாள்
          இதழமுதம்  உண்ணையிலே  விழி துறந்தாள்
     பட படவென்றித  யமதும்  துடிக்கும்  வண்ணம்
          பாவி மகன்  உறவினிலே  தனை  இழந்தாள்
     அட  அட  அவள்  சொல்லுகின்ற  செய்தி  கேட்பீர்
         அநியாய்ம்  அநியாய்ம்  தாங்க  மாட்டீர்

     பொறுக்காத  கோபத்தால்  ஊடல்  கொண்டு
          புறங் காட்டி நிற்பாளாம்  ஊடல் தீர்த்து
     இறுக்காத  இறுக்கத்தால்  நாணம்  கொண்டே
          இரு விழியும் தமையிழக்கச் சுகம்  காண்பாளாம்
     வெறுத்தாள்  போல்  ந்டித்தவளோ  ந்டித்தல்  விட்டு
          விரும்பியவன்  தருகின்ற  சுகம் கொள்வாளாம்
     நெருப்பாறாய்  நின்ற்  உடல்  நீராறாகி
          நிம்மதியாய்  உறங்கையிலே  அவன் செல்வானாம்


     கடுப்பாக  ஒரு செய்தி  சொல்லுகின்றாள்
          கண்மணியாள்  கேளுங்கள்  வியந்து  நிற்பீர்
     அடுக் கடுக்காய்  உறவு  கொண்ட  நாட்களிலும்
          அவனை இவள்  கண்ணாரப் பார்த்ததி்லையாம்
     ஊடலிலே  திரும்பியதால்  பார்க்கவிலையாம்
          உடலிறுக்க  அப்போதும்  பார்க்கவிலையாம்
     கூடலிலே  மயங்கியதால்  பார்க்கவிலையாம்
          கொள்ளை  மொழிப் பாடல்  இதோ  கொள்வீர்  நீரே

     புலவி புறக் கொடுப்பன்  புல்லிடின்  நாண் நிற்பன்
    கலவி களி  ம்யங்கிக் காணேன் - நிலவிய  சீர்
    ம்ண்ணாளும்  செங்கோல்  வள்வனை  யான  ஈதாராக்
    கண்ணாரக்  க்ண்டறியா  ஆறு
    

தமிழகத்தில் முதல் குரல்

     பதிவு  செய்து  தொழிற்சங்கம்  நடத்துகின்ற
          பாங்கதனை  அறியாராய் தமிழர் நாட்டில்
     மதி நிறைந்த  இரு வீரர்  நடத்தி நின்ற
         மாபெரிய  போராட்டம்  உமக்குச் சொல்வேன்
     சதி நிறைந்த  வெள்ளையர் தம் தொழிற்சாலையில்
         சங்கடங்கள்  துன்பங்கள்  கண்டு  நொந்து
     விதி யென்று அதனையுமே  ஏற்று  வெந்து
          விழலுக்கு உழைத்து  நின்ற  ஏழையரின்


     உரிமைக்காய்  குரல்  கொடுத்த  காரணத்தால்
          உலகிலேயே முதன் முதலாய்  நாற்பதாண்டு
     சிறைவாசம்  தனைப்  பெற்றார்  சிதம்பரனார்
          சீரழிந்து  அவர்  குடும்பம்  உலைந்ததன்றே
    உரம்  கொண்ட  குரலுக்குச்  சொந்தக்காரர்
        உத்தமராம்  சிவா  அவர் உடனே சென்றார
    வரலாற்றில்  உழைப்பவர்க்காய்  முதற் குரலே
        வ்.உ.சி.   சிவா தந்த  இடிக் குரலே
    
         

மே தினம்

     உலகத்துத்  தொழிலாளர்  ஒன்று  கூடி
          உளம்  மகிழ்ந்து  கொண்டாடும்   மே தின  நாள்
     கலகத்துக்காரர்  என்று  கைது  செய்து
          கடுந் தண்டனை  அளித்துத்  துன்பம்  தந்தும்
     வெலவெலத்துப் போகாம்ல்  உழைப்பாருக்காய்
          வீரர்களும்  போராடி வென்ற  நாள்  காண்
     கலகலப்பாய்க்  கொண்டாட  எண்ணும்  நேரம்
          கண்ணில்  படும்  உண்மை  அதைத் தடுக்குதையா

     உண்மையிலே  தொழிலாளர்  உரிமையெல்லாம்
           உலகெங்கும்  பெற்று  விட்டார்  என்று  சொல்லல்
     கண்ணிருந்தும்  குருடரென  வாழும்   ந்ம்மைக்
          கண்டவர்கள்  உமிழுதற்கே  வழி வகுக்கும்
     அண்மையிலே  இருக்கின்ற தொழிலாளரின்
          அவதிகளைப்  பார்க்கையிலே வெட்கம் கொல்லும்
     எண்ணும்  இதைத்  தொழிலாளர்    அனைவருக்கும்
          எப்பொழுதும்  நன்மை  வர  உழைத்து  வெல்வோம்