Thursday, May 22, 2008

பாடுகின்றான்

            பாடு்கின்றான்  வயிற்றினிலே  தாளம் போட்டு
                      பாவி மகன்  நடுத்தெருவில்  பாடுகின்றான்
            கூடுகின்றார் மக்களெல்லாம்  அவனைச் சுற்றி
                      கொடுக்கின்றார்  அவரவர்க்கு ஏற்றவாறு
             ஆடுகின்றார்  சிலர்   அவனின்  பாட்டைக் கேட்டு
                       அப்பா  அப்பா  என்றே போற்றுகின்றார்
              நாடி  நின்ற  பாட்டையெல்லாம்  பாடுகின்றான்
                        நாலரைக்  கட்டை  சுதியும்  விலகிடாமல


              வேகாத வெயிலினிலே  பாடுகின்றான்
                        விலகாத  சுதியதனின்  பெருமையோடு
              பாகாக  உருகி   அவன் பாடுகின்றான்
                         பஞ்சமமும்   மத்திமமும் ஷட்சமும்
              வாகாக  அவனோடு  வாழ்வதனை
                         வழியறிவார்  தொகையறிவார் புரிந்து கொள்வார்
              சாகாமல்  வாழ்வதற்காய்ப்  பாடுகின்றான்
                           சங்கீதம்   வாழ்கிறது  மகிழச்சியோடு



            ஆகாரம்  பெற்று விடப்  பாடுகின்றான
                           ஆகாவென்றே  பலரும்  ஆடுகின்றார்
            வாகான  குரல்  தந்த  இறைவனையே
                            வாழ்த்தி  யவன்  மனமுருகிப்  பாடுகின்றான்
             நோகாமல்  குளிர்   நிறைந்த   அரங்குகளில்
                             நூறாக  ஆறாகப்  பாடுவீரே
              சாகாத இவன்  பாட்டைக்  கேட்டால்  பின்னர்
                             சங்கதிகள்  பொய்யென்று  உணர்வீர்  நீரே
              

2 மறுமொழிகள்:

said...

அற்புதம் மிக அருமையான கவிதை அய்யா. இருப்பினும் பாமரனான என்னால் சில வரிகளை புரிந்து கொள்ள முடிவதில்லை. நான் எழ்ழுதிய சில கவிதைகள் http://dailycoffe.blogspot.com என்ற வலைபூவில் உள்ளது. அதைகுறித்த கருத்துக்களை உங்களால் கூற முடியுமா அய்யா ? அவ்வாறு தாஅங்கள செய்தால் அது என்னை மேம்படுத்திக்கொள்ள உதவி செய்யும்.

என்றும் அன்புடன்
இளையகவி

said...

அன்பிற் சிறந்த இளையகவி அய்யா
அவர்களுக்கு வணக்கங்கள்.வாழ்க
தமிழுடன்.

பார்க்கின்றேன் சொல்கின்றேன்
மீண்டும் மீண்டும்
பைந்தமிழை நம் தமிழைப்
பயின்றிடுவீர் நீர்
ஆர்க்கின்ற தமிழன்னை
உங்களுக்கு
அனைத்தையுமே அருள்
செய்வாள் வெல்க நீங்கள்
தங்கள்
நெல்லைக்கண்ணன்