நாணம் வேண்டும் வெட்கம் வேண்டும் நடக்கையிலே
நன்னடையை மென்னடையைப் பயிலல் வேண்டும்
காண வரும் அனைவருமே ஆகா என்று
கண்மணி யுன் நடையழகைப் புகழல் வேண்டும
பேணி இந்த வழியனைத்தும் கொண்டால் தானே
பெண்ணென்று கொள்வார்கள் இல்லை யென்றால்
சாணி கரைத்தூற்றினாற் போல் உன்னை யிங்கு
சாடை மாடை பேசுவார்கள் புரிகி்றதா
பையப் பைய நடந்து வந்தால் தானே
பார்ப்பவர்கள் உன்னழகைப் போற்றுவார்கள்
கையெடுத்து உயர்த்தி ஒரு வாழ்த்துச் சொல்லி
காலெடுத்து மெல்ல நீயும் நடந்தால் தானே
ஐயன் எங்கள் பாண்டியனின் அழகை யெல்லாம்
ஆராதனை செய்து மனதில் கொள்வோம
மெய்யழகே மெல்ல நட பெண்மை போற்று
மேதினியில் யானைகளில் பெண் நீயேதான்
பெண் யானை பாண்டியனைச் சுமந்து வரப்
பேசுகின்றாள் பெண்ணவளும் அவனைக் காண
கண் மலர்ந்து கதவருகே காத்திருக்க
கட கடவென்றே அதுவும் நடந்து போனால்
என் செய்வாள் பெண்ணவளும் அதனாலே தான்
எப்படி ஒரு பெண் நடக்க வேண்டுமென்று
தன்னுணர்வை யெல்லாம் அந்த யானையிடம்
தளிர்க் கொடியாள் போதித்து நிற்றல் கண்டோம்
முத்தொள்ளாயிரம்
எலா அ மடப் பிடியே எங்கூடல்க் கோமான்
புலா அல் நெடு நல் வேல் மாறன் - உலாங்கால்
பைய நடக்கவும் தேற்றாயால் நின் பெண்மை
ஐயப் படுவது உடைத்து
Monday, May 26, 2008
பழம் பாடல் புதுக்கவிதை முத்தொள்ளாயிரம்
Subscribe to:
Post Comments (Atom)
1 மறுமொழிகள்:
தன் மன்னன் அழகு காண
தையலிவள் வேண்டுகின்றாள்
பெண்யானை நடைபழக
புத்திமதி சொல்லுகின்றாள்
கண்பார்க்கத் தான் வேண்டி
களிற்றினையே சீண்டுகின்றாள்
என்னே இவள் மதியூகம்
தமிழ்க்கடலைப் பேச வைத்தாள்!
Post a Comment