மடங்கள் என்றால் பல்லக்கு கவரி வீச்சு
மடமைகளைப் போதித்தல் என்றிருந்த
தடங்களையே மாற்றி நின்றார் எங்கள் தந்தை
தமிழுக்கும் ஏழைக்கும் தன்னைத் தந்தார்
குடம் குடமாய்ப் பால் கொட்டி ஆண்டவனைக்
குளிர்விக்க நினைத்தாரைக் கண்டு நொந்தார
திட மனதால் ஆண்டவர்க்குச் செய்யும் பூசை
திசை தெரியா ஏழையர்க்கு உதவல் என்றார்
குமரியிலே புரியாமல் மதத்தின் பேரால்
குத்து வெட்டு கொலை என்றும்னிதம் வீழ
அமைதியினை நிலை நாட்ட அங்கே சென்றார்
அடிகளவர் சேவையினால் மனிதர் சேர
இமயம் முதல் குமரி வரை இதயம் தோறும்
இருக்கின்ற காந்தி யண்ணல் தமக்குப் பின்னே
குமையும் ரத்தக் களறிக்குள் ஒருவர் சென்றார்
குன்றக்குடித் தந்தையவர் சிவனின் பிள்ளை
உமையவளின் பிள்ளை குன்றக் குமரனவன்
உடன் இருக்க ஞான வடிவாகி நின்றார
தமிழவளின் துணையிருக்க நல்லோர் எல்லாம்
தன் துணையாய்க் கொண்டவரும் சேவை செய்தார்
அமிழ வைக்கும் குடி திரைக் கூத்து எல்லாம்
அண்டாமல் அவ்வூரைக் காத்து நின்றார்
கமழ வைக்கும் சங்க காலப் பட்டிமன்றம்
கருத்திற்காய் நாடெங்கும் நடத்தி நின்றார்
மடமையினை எதிர்த்து நின்ற பெரியார் தன்னை
மடத்துக்கு அழைத்து வ்ந்தார் அவரும் வந்தார்
கடமையினை நனறாக உண்ர்ந்தாராகி
கனித்தமிழாள் குறளுக்கு அவையும் கண்டார்
தடமதனில் செல்லாமல் மீண்டும் நாம்தான்
தடம் மாறிச் செல்கின்றோம் தந்தையவர்
திட மனதைக் கொள்வீரே குன்றக்குடித்
திருத் தமிழை ஏழையரைப் போற்றுவீரே
Sunday, May 11, 2008
அடிகளார்
Subscribe to:
Post Comments (Atom)
4 மறுமொழிகள்:
திருக்குறளே தமிழர் மறை
தினமவர் சொன்ன உரை
தடம் மாறித் தமிழர் செல
தமிழ் வழியில் பாடம் சொல்லி
தரணி வாழ் தமிழர் அவர்
சொன்ன வழி தமிழ்ராவோம்!
குன்றக்குடி அடிகளாரின் நற்குணத்தை
குறையின்றி கூறி எங்கள் உளம் முழுதும்
வளமான எண்ணங்கள் தோன்றச்செய்து
களையில்லா பயிர்வளர்க்க கற்றுத்தந்த
உங்கள் தமிழுக்கு எங்கள் தாழ் வணக்கம்.
அடிகளாரைப்பற்றி இக்காலத்தலைமுறை விரிவாக தெரிந்து கொள்ள ஒரு கட்டுரைத்தொடர் இணையத்தில் நீங்கள் எழுதவேண்டும்.
Post a Comment