உரத்த குரலெடுத்து உண்மைகளைப் பேசி நின்ற
கருத்த திரு மேனி கவலையிலும் அவன் ஞானி
எடுத்த கொள்கையிலே இறுதி வரை தன் வாழ்வைக்
கொடுத்த பெருந்தோழன் கூறு தமிழ் நல்லாசான்
அடுத்த வேளைக் கென்றாரிடமும் செல்லாது
படுத்தும் வறுமையிலும் பாடி நின்ற போர்க் கவிஞன்
தொடுத்த கவிதையெல்லாம் தோழருக்காய் என்றளித்து
மிடுக்கு நிறைந்தானாய் மீசையினை முறுக்கி நின்றான்
எடுத்துப் பாரதியை எங்கும் அவன் பேசையிலே
கருத்த பாரதியாய் கர்ஜனைகள் செய்வான் காண்
தொகுத்துக் கம்பனது தூய தமிழ் தூவையிலே
பழுத்த தமிழறிஞர் பாடி நிற்பார் இவன் புகழை
கடுத்த வறுமையினை காரல் மார்க்ஸ் வழியினிலே
துடைத்து எறிவதற்காய்த் தோழர் அவர் வாழ்ந்தார் காண்
படித்த பள்ளிகளோ பாரதத்தின் வீதிகளே
படைத்திங்கு அளித்ததுவோ பாட்டாளி நீதிகளே
எழுத்ததனால் காந்தியினை இழுத்தான் தனைக் காண
பழுத்த அவர் இவனைத்தான் பாரதத்தின் சொத்து என்றார்
தொடுக்கும் நல்ல வாதத்தால் எவரையுமே தமதாக்கும்
தோழர் இவர் எனச் சொல்லி பெரியாரும் பூரித்தார்
அழுத்தமவர் கொள்கையிலே அன்போ தம் செய்கையிலே
வருத்தும் வறுமையிலும் வாழ்வாங்கு வாழ்ந்த்தார் காண்
தொடுத்து இவர் புகழைத் தோழரெல்லாம் பாடுங்கள்
தோழரென்றால் ஜீவாதான் என்று எங்கும் ஆடுங்கள்
Wednesday, May 21, 2008
கவலையிலும் அவன் ஞானி
Subscribe to:
Post Comments (Atom)
0 மறுமொழிகள்:
Post a Comment