Wednesday, May 28, 2008

பழம் பாடல் புதுக்கவிதை மூத்தொள்ளாயிரம்

                           நீர்  நிலையில்  மலர்ந்துள்ள  மலர்களையே
                                      நெஞ்சினிலே  மாலை  யாக்கிச் சூட்டியுள்ளான்
                           ஈரம்  மட்டும்  அவன்  நெஞ்சில்  இல்லை  இங்கே
                                       இளஞ்சோழன்  காவல்  ஒன்றும்  சரியாயில்லை
                           யாரவனைப்  பாராட்டி  நின்ற போதும்
                                        என் மனது  ஏற்காது  அவர்தம்  காவல்
                           சீரதனைச் சொல்கின்றேன்  கேட்பீர்  நாட்டீர்
                                         சிந்தித்தால்  உணர்வீர்கள்   உண்மை  நன்றாய்


                           காவலன்  தான்  மறுத்தேனோ  இல்லை  இல்லை
                                         கண்கள்  வழி  நுழைந்தானே தடுத்தேனோ நான்
                           ஆவலுடன்  அவன்  தன்னையன்றி  வேறு
                                         யார்  நினைவும்  இல்லாமல்  வாழும்  என்னை
                            காவல்  செய்ய  வேண்டுமென்றால்  மாலை  தோறும்
                                         கையிலுள்ள  குழல் கொண்டு  ஊதி என்றன்
                            ஆவியினைப்  பறிக்கின்ற  ஆடு  மேய்க்கும்
                                          அச்  சிறுவர் கொடுஞ் செயலைத்  தடுக்க  வேண்டும்


                            பாவி  மகள்  கேள்வியிலே  நின்று  ஆடும்
                                          பதை பதைப்புக்  கேள்வியினைப்  புரிந்தீரோ  நீர்
                            தாவி  அவன்  மார்பினிலே  சாய  வொண்ணொ
                                          தனி  இரவு  கொடும்  இரவு  வருவதனை
                            கோவலர்  வாய்க்  குழல்  உணர்த்தும்  என்பதாலே
                                          கொடுமை  அதைத்  தடுப்பதற்கு  வேண்டுகின்றாள்
                             பாவம்  இந்தக்      கோதையினைக்    காப்பதற்கு
                                           பனி மலரின்  சோழன் அவன்  வருவானோ  தான்



                                                      முத்தொள்ளாயிரம்


                          தெண்ணீர்  நறு  மலர்த்தார்  சென்னி  இளவளவன்
                          மண்ணகம்  காவலனே  என்பரால்  -  மண்ணகம்
                          காவலனே  ஆனக்கால் காவானோ  மாலை வாய்க்
                          கோவலர்  வாய்  வைத்த  குழல்

1 மறுமொழிகள்:

said...

தன்னாடு அழைக்கவே வாய்வழிக் குழல் ஊதுகிறான் இந்தக் கோவலன்
தன்னாடு காக்கும் மன்னன் தன்னைத் தவிக்கவைப்பதில் மயங்குகிறாள் பேதை
மயக்கத்தில் பிறக்கும் கோபத்தில் மன்னனை விடுத்துக் கோவலனைப் பழிக்கிறாள்
காவலனும் கோவலனும் இடம் மாறும் இக்காட்சி மிகவும் அருமை

[தலைப்பில் ஒரு த. பி.]