வள்ளுவரை அடிக்கடி நான் சந்திக்கின்றேன்
வாய்ப்பதனை நானே தான் பெற்றும் உள்ளேன்
உள்ளு தொறும் உள்ளுதொறும் உயர்வளிக்கும்
உண்மை வழி அவர்தானே காட்டி நின்றார்
கள்ள மனம் ஒழித் தவர்தம் முன்னால் நின்றால்
கனி வழியாம் தனி வழியைக் காட்டுவாரே
தெள்ளு தமிழ்ப் புலவோர்கள் அனைவருக்கும்
தெளிந்த வழி காட்டியவர் அவரே தானே
உலகத்தில் முதன்மை இடம் யாருக்கென்று
உழன்ற படி வள்ளுவரின் முன்னே நின்றேன்
சில கற்றுப் பல கல்லாச் சிறுவன் என்னைச்
சிரித்த படி வரவேற்றார் கேள்வி வைத்தேன்
பல கற்று உலகத்தை வென்று நின்ற
பண்டிதர்கள் பலர் உண்டு படையெடுத்து
உலகத்தை தன் குடைக் கீழ் கொண்டு வந்த
ஒன்றிரண்டு மன்னர் உண்டு மேலும் நல்ல
சிலை வடிக்கும் சிற்பி உண்டு சிந்தனையால்
செம்மாந்து நிற்கின்ற கவிஞர் உண்டு
விலையில்லாக் கலைகள் உண்டு நாட்டையாளும்
வித்தகர்கள் பல பேர்கள் உண்டு உண்டு
நிலையில்லா வாழ்விதனை விட்டு நீங்க
நினைக்கின்ற துறவியரோ நிறைய உண்டு
கல கலவென்றே சிரித்து அனைவரையும்
கையெடுத்து ஆளுகின்ற பெண்டிர் உண்டு
இவர்களிலே யார் உயர்ந்தோர் என்று ஒரு
இடக்கு மடக்கான கேள்வி கேட்டு வைத்தேன்
அவர் உடனே வயற் காட்டைக் காட்டி நின்றார்
அங்கொருவர் உழுது நின்றார் என்ன என்றேன்
தவ வேட ஞானியரும் கூட இங்கே
தடம் மாறிப் போவார்கள் உழவன் மட்டும்
அவன் கையை மடக்கித் தலைக் கீழே வைத்து
அப்படியே படுத்து விட்டால் ஒழிந்ததெல்லாம
துறந்து விட்டோம் என்பாரோ துயில் இழப்பார்
தொல் புகழின் புலவோர்கள் புகழ் இழப்பார்
இறந்து பட்டோர் புகழினிலே வாழ்வோரெல்லாம்
இரந்து நிற்போர் கூட்டத்தில் இணைந்து நிற்பார்
பரந்து பட்டுப் பாராள்வோர் பல்லிளிப்பார்
பாவியராய் அனைவருமே மாறி நிற்பார்
உழந்து நிற்கும் உழவன் அவன் இல்லையென்றால்
உலகம் இல்லை உயிர்கள் இல்லை ஒன்றும் இல்லை
குறள்
உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்
விட்டேம் என்பார்க்கும் நிலை
Monday, May 26, 2008
திருக்குறள்
Subscribe to:
Post Comments (Atom)
1 மறுமொழிகள்:
உழவன் கைம்மடங்கின்
உலகமே அடி மடுங்குமெனச்
சொல்லிட்ட வள்ளுவனின்
கருத்தினைச் சொல்ல வந்து
கதையொன்றைச் சொல்லிவிட்டாய்!
ஒவ்வொரு குறளுக்கும்
கதையொன்று சொல்லலாமென
அன்று நீ தொலைக்காட்சியில்
சொல்லிவைத்த ஒரு கருத்து
இன்றிங்கே புரியுதைய்யா!
Post a Comment