பார்க்க வேண்டும் என்று நானா பார்த்து நின்றேன்
பாவி மகன் வீதி வழி வந்து விட்டான்
ஆர்க்கின்ற யானை என்ன வாங்கா என்ன
ஆட வைக்கும் மேளமென்ன தாளமென்ன
வார்த்தெடுத்த வடிவழகு மேனி என்ன
வாள் என்ன தோள் என்ன தாள் தான் என்ன
பேர்த்தெடுத்து என் மனதைக் கொண்டு போன
பேராண்மைப் பேரழகு என்ன என்ன
போர்க்குணத்தான் அவனிடத்தில் செல்க தோழி
போய் என்ன சொல்வதென்று நானே சொல்வேன்
கார் குழலாள் என் தோழி என்று என்றன்
கனிப் பெயரைத் தனிப் பெயரைச் சொல்ல வேண்டாம்
பார்த்தென்னைப் பெற்றெடுத்து இன்று வரை
பக்குவமாய்க் காத்து நிற்கும் தாயின் பேரை
சீர் நிறைந்த நம் ஊரின் பெயரையெல்லாம்
செப்புகின்ற வேலையெல்லாம் வேண்டாம் தோழி
ஊரெல்லாம் உறங்குகையில் உறங்கவொண்ணா
உயிரொன்று படும் பாட்டைச் சொன்னால் போதும்
தார் மார்பைச் சேர்ந்திருக்கும் அந்த மாலை
தான் செய்த பேறில்லாள் கண்கள் மட்டும்
நீர் சோர அவன் நினைவில் நெஞ்சம் சோர
நிலைகுலைந்து நிற்பதனை மட்டும் சொல்லு
வார் குழலாள் அரற்றுகின்றாள் பாண்டியனின்
வரவிற்காய் தோழி என்ன செய்வாள் பாவம
முத்தொள்ளாயிரம்
என்னை உரையல் என் பேருரையல் ஊருரையல்
அன்னையும் இன்னாள் என்ன உரையல்-பின்னையும
தண்படா யானை தமிழ்நர் பெருமாற்கு என்
கண் படாவாறே உரை
Sunday, May 25, 2008
பழம் பாடல் புதுக்கவிதை முத்தொள்ளாயிரம்
Subscribe to:
Post Comments (Atom)
2 மறுமொழிகள்:
தானாரெனச் சொல்லாத தனிக்குணமே
தலைவனுக்குத் தானாரெனக் காட்டிடும்
என்கின்ற தைரியம் தனைக்கொண்டு
பெண்ணிவளும் படைக்கின்ற தனிச்சுவையைச்
சொல்லாலே வடித்திங்கு எமக்கிட்ட தமிழ்க்கடலே!
மேலும் பல படைத்திடவே காத்திருக்கிறேன் இங்கு!
அன்பே வடிவான எங்கள் அய்யா
உங்கள்
அன்பன்றோ எனை எழுத வைக்குதிங்கு
கண்ணாகி என் அன்னைதமிழோ இங்கு
காப்பாற்றி நிற்கின்றாள் என்றும் என்னை
பண்ணான தமிழோடு வாழ என்றே
படைத்திட்டான் என் இறைவன் என்னை
நன்கு
உண்ணாமல் இருந்தாலும் தமிழை
மட்டும்
உரைக்காமல் ஒரு நாளும் இருக்க மாட்டேன்
வாழ்க தமிழுடன் நன்றி
நெல்லைக்கண்ணன்
Post a Comment