Saturday, May 24, 2008

வள்ளுவரும் குறளும்

வள்ளுவரைத் தவமிருந்தே பெற்றாள் நல்ல
வடிவழகில் சிறந்தோங்கும் தமிழாம் தாயாள்
அள்ளி அவர் தருகின்ற செல்வம் எல்லாம்
அப்படியே கைக் கொண்டால் வெற்றி கொள்வீர்
எள்ளி நகையாடுதற்கு இடமேயின்றி
எங்கேயும் நீரே தான் தலைமை ஏற்பீர்
உள்ளி அவர் வழி ஒன்றே உண்மை என்று
உணர்ந்தால் நீர் உலகத்தின் உயரே நிற்பீர்


பிறப்போடு இறப்பதனைக் கணக்கெடுக்கும்
பேரேடு அரசாங்கக் கையில் உண்டு
பொறுப்பாக அவர் எடுக்கும் கணக்கை நம்பி
பூமியிலே வாழ்கின்றார் மனிதரெல்லாம்
சிறப்பாக இதை விட்டு வள்ளுவனார்
செய்கின்றார் இப் பணியைத் தனி ஆளாக
கடுப்பாகிப் போயிடுவார் சிலரும் கண்டால்
கலகலத்துச் சிரிப்பீர்கள் நீங்கள் கண்டால்


உயிரோடு ஊரினிலே உயர்ந்தவராய்
உலவுகின்ற பல பேரை வள்ளுவரும்
அயராமல் சவக் கிடங்கில் வைக்கச் சொல்லி
அரசுக்கு ஆணையொன்றை அருளிச் செய்தார்
பயிருக்குள் களை போல வாழுகின்ற
பணம் படைத்தோர் மற்றவர்க்கு உதவி வாழார்
உயிரோடு இருந்தாலும் செத்தார் என்றே
உரைக்கின்றார் உறைக்கட்டும் உலகுக்கென்றே



படிப்பதற்கு உதவியின்றி தவிக்கும் ஏழ
பக்க த்திலே இருந்தும் உதவ எண்ணார்
அடி வயிற்றுப் பசியதனால் கலையிருந்தும்
அறிவிருந்தும் அழிவாரைக் காக்க எண்ணார்
கடி மணத்தைக் காணவொண்ணா ஏழ்மையிலே
கதறி நிற்கும் கன்னியர்க்கு உதவி செய்யார்
பெரியவராய்ப் பணம் கொண்டு வாழ்ந்தாரேனும்
பிணம் என்று கிடங்கினிலே வைக்கச் சொன்னார்


குறள்
ஒத்ததறிவான் உயிர் வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்

1 மறுமொழிகள்:

said...

பையில் பணமிருந்தும் பிறர்க்குதவா மனமிருக்கும் இவரெல்லாம் பிணமே எனச் சொன்ன வள்ளுவனை விளக்கிய தமிழ்க்கடலே! நன்றி!

// பக்கத திலே இருந்தும்//

தட்டச்சுப்பிழை.