உலகெங்கும் வாழுகின்ற தமிழருக்கு என்
உளங் கொண்டு வாழ வைக்கும் தமிழாள் தன்னை
தினம் கொண்டு தருவதற்கு வழிகள் செய்த என்
திருமகனை அறிமுகம் தான் செய்ய வேண்டும்
முனம் செய்த நல் வினையே இவனை எந்தன்
முத்தமிழாள் மகனாகத் தந்து நின்றாள்
மனம் வாழ்த்தி நிற்கிறது சுந்தர ராமன் என்னும்
மகன் இவனை நீங்களும்தான் வாழ்த்துங்களேன்
புதுக்கோட்டை நகருக்கு சுழற்கழகப்
பொன் விழா உரை நிகழ்த்தச் சென்றிருந்தேன்
எனைப் பார்த்துக் கொள்ள என்று வந்த இவன்
இன்று வரை எனைப் பார்த்துக் கொள்கின்றானே
தினம் உங்கள் அனைவருக்கும் கவிதை தர
தேடி இந்த வலைப் பூவை உருவாக்கினான்
குணம் கொண்ட என் மகனை நல்லவனைக்
கூடி நீங்கள் அனைவருமே வாழ்த்த வேண்டும்
Sunday, May 25, 2008
என் மகன்
Subscribe to:
Post Comments (Atom)
3 மறுமொழிகள்:
ஐயா கண்ணன் அவர்களுக்கு,மகன் தந்தைக்காற்றும் உதவியை அழகாக சொல்லியிருக்கிறீர்கள்.
அன்பும் வாழ்த்தும்.
ஒரு சிறிய விண்ணப்பம்:இலக்கியங்களை,திறனாய்வுகளை இணையத்தில் எழுத்து வடிவிலோ,ஒலி வடிவிலோ தந்தால் உங்கள் வலைமனை டி.கே.சி.யுடையதைப் போல ஒரு இணைய வட்டத்தொட்டியாக மாறும் வாய்ப்பிருக்கிறது.அதை ஆர்வமுடன் நானும் எதிர்பார்க்கிறேன்.
கவிதைகள் மட்டுமே தந்தால் உங்கள் பக்கத்திற்கான படிப்பவர் ஆர்வம் நாளடைவில் குறைய வாய்ப்பிருக்கிறது.
தவறாக எண்ண மாட்டீர்கள் என எண்ணுகிறேன்.
தவறாக யாரையுமே எண்ண மாட்டேன்
தமிழாலே நான் பெற்ற நன்மை இது
அழகான சிந்தனையை தந்து நின்றீர்
அதை விரைவாய்த் தருகின்றேன்
நன்றி அய்யா
வாழ்க தமிழுடன்
தங்கள்
நெல்லைக்கண்ணன்
பெற்ற மகனோ, பெறாது பெற்ற மகனோ
நற்றமிழை நாம் தினமும் வலையில் பெற உற்ற மகனோ
கற்றதெல்லாம் தினம் படைத்து கவின்சுவையை எமக்களித்து
சிற்றறிவைத் தூண்டிவிடும் சிந்தனைகள் நிதம் சொல்லி
உற்றவராய்ப் பலகாலம் இங்கிருப்பீர் என வாழ்த்துகிறேன்!
நன்றி. வணக்கம்.
Post a Comment