Monday, September 15, 2008

பழம் பாடல் கம்பன்

போர்க் களத்தில் நிற்கின்றான் இராவணனும்
  பொருது நிற்கும் இராமனது போர்த் திறனை
  ஆர்க்கின்ற அவன் வில்லை அதிரடியாய்
  அழிவெல்லாம் நடத்துகின்ற அம்பையெல்லாம்
  பேர்க்கின்றான் தன் மனத்தை சீதையின் பால்
  பெருமை கொண்டாள் பொறுமையினால் என்று சொல்லி
  சீர் கொண்ட மூங்கிலைப் போல் தோள்கள் கொண்டாள்
  சிறந்த இந்த இராமனது தேகம் தன்னை


  வார் கொண்ட மென்முலையால் அணைத்தவள்தான்
  வடிவெல்லாம் கண்டவள்தான் என்ற போதும்
  போர் செய்யும் இவன் மேனி கண்டிருந்தால்
  புகழுடைய மன்மதனும் நானும் இங்கே
  நாயென்றே நினைத்திருப்பாள் நல்ல வேளை
  நாயகியும் காணவில்லை என்றுரைத்தான்
  வாயாலே இராமனது போர்த் திறத்தை
  வாழ்த்துகின்றான் சுத்த வீரன் இராவணனும்


  கம்பன் செய்யுள்

  போயினித் தெரிவதென்னே பொறையினால் உலகம் போற்றும்
  வேயெனத் தகைய தோளி இராகவன் மேனி நோக்கில்
  தீயென கொடிய வீரச் சேவகச் செய்கை காணில்
  நாயெனத் தகுதும் அன்றே காமனும் நாமும் எல்லாம்

0 மறுமொழிகள்: