Monday, September 15, 2008

நாணாமல் வாழ்கின்றாரெ

 பெண்களினைப் போற்றாதார் வாழ்வில் என்ன
  பெருமைகளைக் கண்டு விட முடியும் நல்ல
  கண்களினைக் கொண்டிருந்தும் காணாராகிக்
  கதைத்து நிற்கும் மானிடரை என்ன சொல்ல
  விண் வெளியை வென்று விட்டார் மேலும்மேலும்
  விஞ்ஞானப் பேரழிவைக் கண்டு விட்டார்
  நல் மனத்துப் பெண்களது அன்பை இன்ப
  நலம் சேர்க்கும் உடலதனைப் பேணி னாரா

  கண் மணியே என்கின்றார் அணைக்கும் நேரம்
  கவிதைகளாய்ப் போற்றுகின்றார் காம நேரம்
  சொல்வதெல்லாம் ஏற்கின்றார் அந்த நேரம்
  சுகம் முடிந்தால் உறங்குகின்றார் விடிந்தாலங்கே
  புண் படவே பேசுகின்றார் கொண்ட சுகப்
  பொலிவை யெல்லாம் மறக்கின்றார் அடிமையாகப்
  பெண்ணினத்தை நடத்துகின்றார் அந்தோ அந்தோ
  பேணாமல் நாணாமல் வாழ்கின்றாரே
   

0 மறுமொழிகள்: