Friday, September 19, 2008

தேரா மன்னா சிலப்பதிகாரம்

 

 

 தேரா மன்னா என்ற தீத் தமிழின் வார்த்தைக்குள்
  தெளிவான பல கேள்வி வைக்கின்றாள் கண்ணகியும்
  ஆராய்ந்து பார்க்கையிலே அத்தனையும் வியப்பாகும்
  அறிவென்றல் பெண்களுக்கே முதல் உரிமை என்றாகும்
  நீர் வார் கண்ணாய் என்றழைத்த நெடுஞ்செழியன்
  நிலை உணர வைத்தாளே கண்ணகியாம் பெருமாட்டி
  சீரார் தமிழினத்தீர் செப்புகின்றேன் அவள் மொழியை
  செவி மடுப்பீர் சிலம்பதனின் சிறப்பையே சிறப்பாக


  சிலம்பாலே ஒருவனையே சிரமெடுக்கச் சொன்னவனே
  சிலம்போடு வந்து நின்றேன் கண்களிலே நீரோடு
  குல மானம் காக்க என் கோவலனின் பேர் காக்க
  உளம் திரிந்து தீர்ப்பளித்தாய் உணரவில்லை நீயதனை
  சிலம்போடு நிற்கின்றேன் என்றவுடன் யாரென்று
  குழம்பாமல் இருந்திருந்தாலதீர்ப்பளித்த மன்னவனே
  மதியில்லாய் தேராமல் மாபெரிய தவறு செய்தாய்


 தலையோடு உடல் சேர்த்தேன் தழுவினேன் என்னவனை
  தங்குக என்றுத்தரவில் தனியளாய் நின்றேன் நான்
 உலகனைத்தும் காக்கின்ற உத்தமனாம் ஞாயிறையே
  தலைமகள் நான் வினவி நின்றேன் தங்க மகன் தனைக் குறித்து
 நிலையுணர்ந்தான் சொன்னான் நின் தவறை அதனாலே
  எரியுண்ணும் உன் ஊரை என்றவனும் தீர்ப்பளித்தான்
 உனக்கிதனை உன் ஒற்றர் உரைத்திருந்தால் நீயென்னை
  விளக்கங்கள் கேட்பாயோ வீணாகி அறிவிழந்தாய்


 மதுரையாம் பதியினிலே மக்கள் எனைக் கண்டவுடன்
  மாபெரிய தெய்வம் என்று எனை வணங்கி நின்றார்கள்
 தெருத் தெருவாய் அலைந்தேன் உன் தீய செயல் சொன்னேன் நான்
  தேடிஅறி ஒற்றர்களை நீ மட்டும் கொண்டிருந்தால்
 வருத்தமதை உன் மக்கள் வாயிழந்து நின்றதனை
  வந்தே உன்னிடத்தில் அவர் வகையாக் உரைத்திருப்பர்
 பொருத்தமின்றி யாரென்று என்னிடத்தில் கேட்டாயே
  பொறுமையின்றித் தீர்ப்பளித்த் புத்தியில்லா மன்னவனே


 தேரா மன்னா என்ற ஒரு வார்த்தை தனக்குள்ளே
  தெயவ மகள் இத்தனையும் வைத்துள்ளாள் என்பதனை
 நானே உரை செய்ய நற்றமிழார் எனை வணங்கி
  தேனாம் தமிழன்னை உந்தனொடு இருப்பதனால்
 தேடி உரை செய்கின்றாய் என்றெனையே பாராட்ட
  நானோ இவையெல்லாம் நாயகனின் உரை என்றேன்
 நாடி நின்ற தமிழ்த் தாயின் நலமான அன்பென்றேன்
  வானோனும் தமிழ்த் தாயும் வழங்குவதால் வாழ்கின்றேன்

0 மறுமொழிகள்: