Thursday, June 12, 2008

அவர் உரிமை அவர்க்கு

            பெண்களென்றால்  எங்கேயும்    எப்பொழுதும்
                   பேசுகின்றார்  அவதூறாய் கீழ்த்தரமாய்க்
            கண்களென்று  சொல்லுவது தங்களது
                    காம வெறி  தீர்க்கின்ற  நேரம்  மட்டும்
            புண்களிவர்  புண்களிவர் என்றிவரைப்
                    புறந் தள்ள  மாட்டாமல்  பெண்கள்  வாழ்வார்
            அண்ணியென்றும்  அம்மையென்றும்  அக்காளென்றும்
                    அன்புத் தங்கையென்று  மட்டும்  உறவைச் சொல்வார்


            பெண்ணில்லா  வாழ்க்கையது  வாழ்வே இல்லை
                     பேரறிஞர்  வள்ளுவரும்  அறிவாய்ச் சொன்னார்
            கண்ணான  பெண்  தன்னைக் காத்துக்  கொள்வாள்
                     கடுமை  செய்து அடைத்து வைத்தல்  அசிங்கம்  என்றார்
            மண்ணாள்வார்  முதல்  ஏழை  மனிதன்  வரை
                     மங்கையரைக்  கொடுமை செய்தல்  முடியவில்லை
            எண்ணாரே  தன்  தாயைப்  போல்  தான்  இங்கே
                     எப்பெண்ணும்  என்றிங்கு  மனிதர்  நன்கு


             தன்  மனைவி  கற்போடு  வாழ்வதற்காய்
                      தமிழென்றும்  இனமென்றும்  பேசிடுவார்
             முன் வீட்டான்  மனைவியுடன்  முனைந்து  பேசி
                      முத்தங்கள்  பெற்று  விட  முயற்சி செய்வார்
             பண்பற்றார்  இவர்  வீட்டுப்  பெண்கள்  மட்டும்
                      பத்தினியாய்  வாழ்வதற்காய்ச் செத்திடுவார்
             அன்பற்றுப்  பிறர்  மனைவி  தன்னை  மட்டும்
                     அடைவதற்காய் பலப்பல்வாம்  வேலை செய்வார


             அவளுக்கும்  உடம்புண்டு  உணர்வு  உண்டு
                      ஆசையுண்டு  மானமுண்டு ரோஷமுண்டு
              தவறுக்காய்  அலைவதற்கா  பெண்  பிறந்தாள்
                       தடுமாறி  நிற்கின்ற  ஆண் குலத்தீர்
              கவடின்றிப்  பெண்களினை  வாழ  விடும்
                        கருத்திழந்து  வாழ்விழந்து  ஒழிந்திடாதீர்
              அவர்  உரிமை அவர்க்கு  அதைப்  பறிப்பதற்காய்
                        ஆடாதீர்  பொய்யொழுக்ககம்  பேசிப் பேசி

0 மறுமொழிகள்: