Tuesday, June 10, 2008

குறட் கருத்து

              உழைப்பாலும்  உண்மையாலும்  பணம்  படைத்து
                        உயர்ந்ததொரு  நற்குடும்பம்  வழி வ்ழியாய்ச்
              சிறப்பாக  வாழ்ந்திடுவோர்  ஊருக்கெல்லாம
                        செய்வதிலே மனம்  நிறைந்து  வாழ்ந்திருப்போர்
              பொறுப்பாக  வாழ்ந்தவர்கள்  பிள்ளைகளும்
                         பொறுப்புணரச் செல்வத்தைப்  பிரித்தளித்தார்
               சிறப்பான  பிள்ளைகளில்  ஒருவர்  மட்டும்
                          செல்வமெல்லாம்  இழந்திட்டார்  ஆண்டு  ஒன்றில்


               வரப்  போகக் கூட  அந்தப்  பிள்ளை  தனக்கு
                           வழி  செய்தார் இல்லை அன்பாய்ப் பெற்ற  தாயார்
               கரம்  நீட்டி  ஊரினிலே  பிச்சையேற்று
                            கவலையிலே  வாழ்கின்றார் என்ற போதும்
               தரம்  இழந்து  அழிகின்ற  பிள்ளை  தன்னை
                            தன்  மகனாய்ப்  பார்க்கவில்லை  ஈன்ற  அன்னை
               வரம்  தந்த  வாழ்வதனில  அந்தப் பிள்ளை
                            வறுமையினைப்  பெற்ற  வழி  உணர்ந்த  அன்னை



              ஊரார்  போய்  அவருக்காய்  அன்னையிடம்
                            உதவி  கேட்டு நிற்கையிலே  அன்னை சொன்னார்
              பேரான  பேர்  பெற்ற    குடும்பம்  தன்னில்  பிறந்தானே
                            பெயரழிக்கும்  வழியிலெல்லாம
               ஊர்  ஊராய்ச்  சூதாடி  பெண்கள்  வாழ்வை
                            ஒழித்தவரை  அழித்தங்கு   வறுமை கொண்டான்
               சீராக  வாழ்ந்தங்கு  ஏழையரை  சீர்  படுத்தி
                             அதனாலா  வறுமை  கொண்டான்


              ஊரெங்கும்  குளக்கரைகள்  வெட்டினானா
                             உயர்  கல்விச்  சாலைகளைக்  கட்டினானா
              தேரோடும்  தெருக்களையைச்  சரி   செய்தானா
                             தெய்வ  வழி பாடுகளில்  அழிந்தொழிந்தானா
               சீரான  அறமற்ற  வழிகளிலே   தன்
                              செல்வமெல்லாம்  அழித்தான்  என்  மகனேயில்லை
               நேரான  வழிகளிலே  அழித்திருந்தால்
                               நெஞ்சமெல்லாம்  நிறைந்திருப்பேன் என்றாள்  அன்னை


               அறஞ் சார்ந்த  வழிகளிலே  வறுமை  வந்தால்
                                அன்னை  மனம்  பூரிக்கும் அதனை விட்டு
               புறம் போகி   தவறுகளால்  செல்வமெல்லாம்
                                 போக்கி நின்றால்  மகன்  என்று சொல்லுதற்கே
               விரும்பாளாம்  அன்னையவள்  அவனைக் கண்டால்
                                 வேறெவரோ  போல்  விலகி  விரைந்திடுவாளாம்
               தரும்  கருத்தைக்  குறுங் கருத்தாய்த்  தந்து  நின்றார்
                                 த்மிழ்த்  தாயின்  தலை மகனாம்  வள்ளுவரும்



                                         திருக்குறள்

              அறஞ்சாரா  நல்குரவு  ஈன்ற  தாயானும்
              பிறன்  போல  நோக்கப் படும்
               
                          

0 மறுமொழிகள்: