Thursday, May 15, 2008

பழம் பாடல் புதுக்கவிதை முத்தொள்ளாயிரம்

          சோழன்  என்றால் நேர்மைக்கு  ஒருவன்  என்றும்
                    சொன்ன சொல்லைக் காப்பாற்றும மேலோன் என்றும
          ஆழ  நெடுங் கவிதை களில்  புலவர் எல்லாம்
                     ஆர்ப்பாட்டமாய்ப்  பாடி  அளந்து  விட்டார்
           வேழ  நெடும் படை  கொண்ட  வீரன்  என்றார்
                      வீணர்களை ஒழிப்பதிலே  சூரன்  என்றார்
            பேழையென தன்  நாட்டைக்  காத்து  நின்று
                       பெருமையெல்லாம்  போற்றி  நின்ற  வள்ளல்  என்றார்



            ஏழையென்னை  யாரேனும்  நினைத்தாரா  பார்
                        எனக்குள்ள  குறைகளினைக்  கேட்டாரா   பார்
            பேழை  தன்னை  இடைநடுவில்  கொண்ட பெண்ணே
                        பேசி நிற்பார்  தன்னிடத்தில்  சொல்வாயா  நீ
            வாழையடி  வாழையென  சோழ  நாட்டில்
                         வரி  என்றல்  ஆறில்  ஒரு பங்கு தானே
             கோழையைப்  போல்  என்னுடைய  நெஞ்சும்  நாணும்
                         கொண்டிருந்த  நலன்  எல்லாம்  பறித்துக்  கொண்டான்


              பீழையிதைச்  செய்து  என்னை அலைக்கழிக்கும
                          பிரியமில்லாப்   பெரியவனா சோழ  மன்னன்
              நாளை  வரும்  வரலாற்றில்  இவனை  யாரும்
                          நல்லவன்  என்றே  உரைத்தால்  நீதியா மோ
              வாளை  மீனைப்  போன்ற  கண்ணாள் வடிவழகாள்
                          வாடி நின்று  நீதி கேட்டாள்  தோழியிடம்
               காளையந்தச்  சோழ  மன்னன்  நெறி தவறி
                           கன்னியிடம்  பறித்ததெல்லாம்  தருவானோதான்


                                          முத்தொள்ளாயிரம்

                   என் நெஞ்சும்  நாணும்  நலனும்  இவையெல்லாம்
                    மன்னன்  புனல்  நாடன் வெளவினான்=மின்னே
                    அரவகல்  அல்குலாய்  ஆறில்  ஒன்றன்றோ
                     புரவலர்  கொள்ளும்  பொருள்
                         

2 மறுமொழிகள்:

said...

நல்ல பதிவு ஐயா!

சிலப்பதிகாரப் பதிவுகளையும் போடுங்களேன்!

வள்ளல் 'வ்ள்ளல்' என வந்திருக்கிறது.

'என்றல்' என்பது தட்டச்சுப்பிழை அல்லவே!

கவனிக்கவும்.

நன்றி.

said...

தட்டச்சுப் பிழைதன்னை
திருத்தி விட்டேன்
தயை கூர்ந்து மீண்டும்
அதைப் பார்க்க வேண்டும்

வாழ்க தமிழுடன்
நெல்லைக்கண்ணன்