Wednesday, May 28, 2008

திருமந்திரம்

                 அம்பலத்தில்  நல்லவர்  போல்  ஆடுகின்றார்
                         அறைகளுக்குள்  லீலைகளில்  கூடுகின்றார்
                 தம் பலத்தில்  அத்தனையும்  நடப்பதுவாய்
                          தம்பட்டம்  அடிக்கின்றார் மேலும் மேலும்
                 வெம்பி  இங்கு  ஏழையர்கள்  துன்பமுறும்
                           வேலைகளைச்  செய்வதிலே  வெட்கமுறார்
                  அம்புவியில்  தங்களது  செய்கை யெல்லாம
                            ஆரறிவார்  ரகசியம்  என்றெண்ணுகின்றார்



                  நல்லவரோ  இவற்றையெல்லாம்  கண்டு  கண்டு
                             நாள்  தோறும்  சிரிக்கின்றார் அவர்   உணர்வார்
                  எல்லை யற்ற  பரம்  பொருளாம்  இறைவன்  அவன்
                             எங்கே  தான்  இல்லை   என்றும்    பார்த்திருப்பான்
                  கள்ளமற்றோர்  உணர்ந்திருந்தார்  தவறு  இல்லை
                             களங்கமுள்ளோர்  மறந்திருந்தார் தவறுகின்றார்
                  அள்ளி  அருள்  தருகின்ற   இறைவன்  அவன்
                              அனைத்தையுமே  அறிந்திருப்பான் என்றுணர்க



                                                     திருமந்திரம்


                    கண்காணி  இல்லை யென்று  கள்ளம்  பல   செய்வார்
                    கண்காணி  இல்லா  இடமில்லை  காணுங்கால்
                    கண்காணி  ஆகக்  கலந்தெங்கும்  நின்றானை  
                    கண்காணி  கண்டார்  களவொழிந்தாரே
                            

3 மறுமொழிகள்:

said...

தந்திரங்கள் கொண்டதிரு மந்திரத்தின்
தன்னேரில் லாதவுயர் தத்துவங்கள்
முந்திவர விருத்தத்தில் வரைந்து தந்த
முனைகூர்த்த புதுமையினில் மகிழ்ந்தேன் அய்யா!
செந்தமிழர் ஆன்மீகச் சுவடாய் நிற்கும்
ஒப்பில்லா நூலிதற்கு நீவீர் இங்கு
சந்தமுறும் செழுங்கவியில் உரைகள் தந்தால்
சீர்பெற்று நற்பணியாய் நிலைக்கும் அன்றோ!!

said...

மிக அருமை அய்யா,

"இறைவன் ஒருவன் இங்கிருந்தால்
இவைகள் ஏன் நடக்கிறது?
அவன் கல்லாகி போனதிலே
காரணமும் இருக்கிறது"

என்றும் அன்புடன்
இளையகவி

said...

கண்காணி காணுகின்ற காட்சியிலே பிழையில்லை
கண்காணி அனைத்தையுமே கண்ணாரக் கண்டிருப்பான்
கண்காணி அறிகின்ற கோலத்தில் இதுவுமொன்றே
கண்காணி அல்லாமல் காட்சிகளும் ஏதிங்கே!